பெசோஸ் தொலைபேசியை ஹெக் செய்த சவூதி முடிக்குரிய இளவரசர்

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் தொலைபேசி கடந்த 2018 ஆம் ஆண்டு ஹேக் செய்யப்பட்டதன் பின்னணியில் முடிக்குரிய இளவரசர் மொஹமது பின் சல்மான் இருப்பதாக வெளிவந்துள்ள ஊடக செய்தி அறிக்கை அபத்தமானது என்று சவூதி அரேபியா கூறியுள்ளது.

பெசோஸின் தொலைபேசியில் ஊடுருவ, இளவரசர் மொஹமது பின் சல்மான் ஒரு தீங்கிழைக்கும் வாட்ஸ்அப் வீடியோவை அனுப்பினார் என்று ஆங்கில நாளிதழ் ஒன்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும் அந்தச் செய்தியில் பெசோஸின் பாதுகாப்பு பொறுப்பாளர் கூறும்போது, “சவூதி அரேபியா அரசு பெசோஸின் கைபேசியை பயன்படுத்தி, அதிலிருந்து தகவல்களை எடுத்துள்ளது. சவூதி அரேபியா பெசோஸின் கைபேசியில் ஊடுருவியுள்ளது என்று எங்களுடைய விசாரணை அதிகாரிகள் மற்றும் பல வல்லுநர்கள் உச்சகட்ட நம்பிக்கையுடன் உறுதிபடுத்தியுள்ளனர்” என்று தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவை அனுப்பிய பின்னர் பெசோஸின் தொலைபேசியில் இருந்து பெரிய அளவிலான தகவல்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சவூதி அரேபிய அரசு, இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

பெசோஸிற்கு சொந்தமான வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கட்டுரையாளரும், சவூதி பத்திரிகையாளருமான ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டதில் இருந்து பெசோஸ் மற்றும் சவூதி அரசுக்கு இடையேயான உறவு மோசமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 01/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை