இந்திய படகுகளின் அத்துமீறும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

இந்திய மத்திய அரசின் செயற்பாட்டிற்கு அமைச்சர் டக்ளஸ் சபையில் பாராட்டு

எமது நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற எல்லைமீறிய இந்திய இழுவலைப் படகுகள் மூலமான பிரச்சினை விரைவில் தீரும் என்ற நம்பிக்கையும் தற்போது ஏற்பட்டுள்ளதென கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் 9 ஒழுங்குவிதிகள் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் - கரையோரங்களை அண்டியதாக கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்ற தமிழ்நாட்டு இழுவலைப் படகுகள் மூலமான தொழிற் செயற்பாடுகளை மாற்றி, அவற்றை ஆழ்கடல் தொழிலாக முன்னெடுப்பதற்கென இந்திய மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டு அரசுக்கு பாரியளவு நிதியை வழங்கியுள்ளதாகத் தெரிய வருகின்றது.இந்திய மத்திய அரசின் இந்தச் செயற்பாட்டை நாம் வரவேற்கின்றோம். எமது மக்கள் சார்பாக இந்திய அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு, இந்தியப் பிரதமர் மட்டத்தில் இந்திய கடற்றொழிலாளர்களால் எமது  நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடி இருந்தார்.

அத்துடன், கடற்றொழில் சார்ந்த சட்டமூலத்திலும் நாங்கள் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக, பிரதேசத்திற்குப் பிரதேசம் கடல் வளங்களை ஆய்வு செய்து அறிந்து, அதற்கேற்பதான தொழில்சார் ஒழுங்குவிதிகளைக் கொண்டு வர வேண்டியுள்ளது.

கடலோரம் சார்ந்து வாழ்ந்து வருகின்ற மக்கள் தங்களது வாழ்விடங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் ஆபத்தான நிலைமைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்ற நிலையில், இம் மக்களது வாழ்விடங்கள் முதற்கொண்டு, தொழில் வாய்ப்புகள் வரையிலான அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டதான விஞ்ஞானபூர்வமான அறிவியல் சார்ந்த நிலைபேறான அபிவிருத்தியே இன்றைய கடற்றொழிற்துறையின் தேவையாக உள்ளது.

களப்புகளை மையமாகக் கொண்ட கடலுணவு மேம்பாடு குறித்தும் நாம் வெகு அவதானத்தைச் செலுத்தி வருகின்றோம். எமது நாட்டைப் பொறுத்த வரையில் சுமார் 1 இலட்சத்து 60 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் களப்பு சார் நீரக வள மூலங்கள் காணப்படுகின்றன. அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இறால், கொடுவா மீன், கனவாய் மீன், கடலட்டை மற்றும் நண்டு போன்ற பண்ணைகளை மேலும் உருவாக்குவதற்கும்,அவற்றை விரிவுபடுத்துவதற்கும் இதன் மூலமாக திட்டமிட்டுள்ளோம்.

இந்தச் சபையிலே சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் முன்மொழிவுகள் யாவும் இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் குறிப்பாக எமது எதிர்கால சந்ததியினரதும் நலன் கருதியே வகுக்கப்பட்டுள்ளன .

நாட்டின் நீர் பரப்புகளுக்குள் நீர் வாழ் உயிரினங்களையும், நீரக வள மூலங்களையும் பாதுகாக்கின்ற ஒழங்கு விதியின் கீழ் நீரக வள மூலங்களைக் கொண்ட நிலைகளில் நீர் வாழ் உயிரினங்களுக்கும் அதேநேரம், நீரக வள மூலங்களுக்கும் பாதிப்பை உண்டு பண்ணக் கூடிய எவ்விதமான கழிவுப் பொருட்களையும் எறிவது கொட்டுவது தடை செய்யப்படுகின்றது.

 

 

லோரன்ஸ் செல்வநாயகம்,

ஷம்ஸ் பாஹிம்

Wed, 01/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை