பக்தாத் தூதரகம் மீதான தாக்குதல்: அமெரிக்க துருப்புகள் ஈராக் விரைவு

ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா மேலதிக துருப்புகளை அனுப்பவுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் பல டஜன் துணைப்படையினர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் சோதனைச் சாவடிக்கு தீமூட்டி அதிக பாதுகாப்புக் கொண்ட பக்தாதின் பசுமை வலயத்திற்குள் கடந்த செவ்வாய்க்கிழமை ஊடுருவினர்.

ஈராக்கில் இருக்கும் அமெரிக்க துருப்புகளை வெளியேறும்படி கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்தை சுற்றிவளைத்தனர். அங்கு அமெரிக்க தேசிய கொடியை தீயிட்டு, “அமெரிக்கா ஒழிக” என்று கோசம் எழுப்பினர்.

இந்த சம்பவத்திற்கு ஈரான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டி இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஈராக் தனது படையினரை தூதரகத்தை பாதுகாக்க பயன்படுத்தும் என்று நாம் எதிர்பார்த்தோம் அது பற்றி நாம் அறிவுறுத்தினோம் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

இதனிடையே ஈரான் இதற்காக பெரும் விலைகொடுக்க வேண்டி இருக்கும் என்று டிரம்ப் பின்னர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். எனினும் இது தொடர்பில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழல் குறித்து டிரம்பிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அதனை நான் விரும்புகிறேனா? இல்லை. எனக்கு அமைதியே தேவை. நான் அமைதியை விரும்புகிறேன். எல்லோரையும் விட ஈரானுக்கே அமைதி தேவையாக உள்ளது” என்றார்.

இதேவேளை, 82 ஆவது வான்வழிப் பிரிவின் துரித நடவடிக்கை குழுவைச் சேர்ந்த சுமார் 750 துருப்புகளை அடுத்த ஒருசில தினங்களில் பிராந்தியத்திற்கு அனுப்பவிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் குறிப்பிட்டுள்ளார்.

“பக்தாதில் நாம் இன்று பார்த்தது போன்று அமெரிக்க ஆட்கள் மற்றும் வசதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல் அளவு அதிகரித்திப்பதற்கு பதில் நடவடிக்கையாகவே முன்னெச்சரிக்கையாக இந்த துருப்புகள் அனுப்பப்படுகின்றன” என்று அவர் குறிப்பிட்டார்.

குவைட்டில் உள்ள நெருக்கடிக்கு எதிரான பதில் நடவடிக்கை கட்டளையகத்தில் உள்ள துருப்புகள் ஈராக்கில் பணியமர்த்தப்படும் என்று அமெரிக்க கடற்படை சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மே மாதம் ஈரான் அச்சுறுத்தல் காரணமாக வளைகுடா பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்ட 14,000 அமெரிக்கத் துருப்புகளுக்கு மேலதிகமாகவே இந்த 750 படையினரும் பணியமர்த்தப்படவுள்ளனர்.

அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் இடம்பெறும்போது ஈராக்கில் சுமார் 5,200 அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டிருந்தன. இந்தப் படைகள் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுக்கு எதிரான போரில் ஈராக் துருப்புகளுக்கு உதவியாக நிலைகொண்டுள்ளன.

ஈரான் ஆதரவு போராட்டக் குழுவான காதைப் ஹெஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்தே சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை வான் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ஒப்பந்ததாரர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியது.

அமெரிக்காவின் தாக்குதல்களில் குறைந்தது 25 காதைப் ஹெஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டனர்.

Thu, 01/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை