பாராளுமன்றத்தில் எளிமையான வைபவம்

மரியாதை வேட்டுக்கள், குதிரைப்படை அணிவகுப்புக்கள் இல்லை

எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் நேற்று முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் முற்பகல் 9.30 மணிக்கு விசேட அதிதிகளின் வருகையுடன் ஆரம்பமாகியது. பாராளுமன்ற முகப்பில் வரவேற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற்றது. முதலில் சபாநாயகர் கரு ஜயசூரிய வருகை தந்ததோடு அவரை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க வரவேற்றார். அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  மற்றும் அவரது பாரியார் வருகைதந்தனர். அவர்களை சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் வரவேற்றனர்.

தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காலை 9.40 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.

அவருக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. அவரை சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற நுழைவாயில் வரை அழைத்துச் சென்றார். அங்கு ஜனாதிபதியை வரவேற்கும் வகையில் கோட்டை ஆனந்த பாலிகா வித்தியாலய மாணவர்கள் ஜயமங்கள கீதம் இசைத்தார்கள்.

முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த மரியாதையின் நிமித்தம் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்படும் நிகழ்வும், இராணுவ மரியாதை நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்பட்டன.

அதேபோன்று ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வைப்பதற்காக வரும்போது சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியுடன் வரும் குதிரைப்படை, வாகன தொடரணி, மோட்டார் சைக்கிள் தெடரணி போன்ற எதுவும் இம் முறை இடம்பெறவில்லை.

ஜனாதிபதியின் வாகனத்துக்கு பின்னால் ஒரு டிபெண்டர் வாகனமும் முன்னால் ஒரு டிபெண்டர் வாகனமும் மூன்று பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே தொடரணியாக வருகைதந்தன.

காலை 10.00 மணிக்கு சபையின் பிரதான நுழைவாயிலில் படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி சபைக்குள் அழைத்துச் செல்லப்பட்டதுடன் பாராளுமன்ற கூட்டத்தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் பிரதமர்கள், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், மேல்நீதிமன்ற நீதிபதிகள், சட்ட மாஅதிபர் உள்ளிட்ட 600ற்கும் மேற்பட்ட சிறப்பு அதிதிகள் கலந்துகொண்டனர். பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான ஜனாதிபதியின் பிரகடனத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் வாசித்த பின்னர் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி தனது சிம்மாசன உரையை நிகழ்த்தினார். சுமார் 35 நிமிடங்கள் உரையாற்றிய பின்னர் சபை அமர்வுகளை பிற்பகல் 1.00மணி வரை ஜனாதிபதி ஒத்திவைத்தார்.

அதனைத் தொடர்ந்து எம்.பிகளுக்கும் விருந்தினர்களுக்கும் சபாநாயகர் விருந்துபசாரம் வழங்கினார். இதில் ஜனாதிபதி, பிரதமர்,எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு எம்.பிக்கள், தூதுவர்கள், அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

விருந்துபசார மண்டபத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் முதலில் வருகை தந்திருந்ததோடு முன்னாள் பிரதமர் ரணில் அங்கு சமுகமளித்தார். அவர் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் சுமூகமாக உரையாற்றுவதை காணக்கூடியதாக இருந்தது.

அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் த.தே.கூ எம்.பிக்கள் சிலரும் அங்கு வருகை தந்தனர். இரா சம்பந்தன் சுமார் 5 நிமிடங்கள் வரை ஜனாதிபதியுடன் உரையாடியதோடு அவர் கூறுபவற்றை ஜனாதிபதி ஆர்வமாக செவிமடுத்துக்கொண்டிருந்தார். இரா. சம்பந்தன் பிரதமருடனும் உரையாடினார்.

அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐ.தே.க எம்.பிக்கள் சிலர் சமுகமளித்தனர். சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதியுடன் கைலாகு கொடுத்து சில நிமிடங்கள் உரையாடினார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் 30 நிமிடங்கள் வரை விருந்துபசார மண்டபத்தில் அமர்ந்திருந்து விருந்தினர்களுடன் சுமுகமாக உரையாடிய பின்னர் வெளியேறினர். ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு எம்.பிக்கள் பலரும் நற்புறவுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

 

 

Sat, 01/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை