பாராளுமன்றத் தேர்தல்; உரிய நேரத்தில் சரியான தீர்மானம் எடுப்போம்

கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் மீள கூட்டமைப்பிற்கு வருவதில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால் அவர்கள் நொண்டிச் சாட்டுக்களை சொல்லி வருகின்றதாக குறிப்பிட்டுள்ள கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ,சுமந்திரன் மாற்று அணி என்பது தேவையில்லை எனவும் ஆனாலும் மாற்று அணியொன்று உருவாக்கப்படுவதென்பது தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்யப்படுகின்ற மாபெரும் சதி நடவடிக்கை என்றும் சாடினார்.

கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள், புதிய அணிகள் உருவாக்கம் என்பன குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கூறுகையில்,

கூட்டமைப்பிற்குள் இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் சுமூகமாகத் தான் பேசித் தீர்த்துக் கொண்டு வருகிறோம். தேர்தல் சம்மந்தமாக கூட சுமுகமான தீர்வுகள் ஏற்பட்டுள்ளன. எதிலும் எந்தவித பிரச்சினையும் இருக்கவில்லை.

இதில் முதலாவது விடயம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. கடந்த இரண்டு மூன்று கூட்டங்களில் எல்லாவற்றையும் சுமூகமாக பேசி இணங்கியிருக்கிறோம். மேலும் எவருமே கூட்டமைப்பில் இருந்து விலகுவாதாகச் சொன்னதும் கிடையாது.

மேலும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவதிலுள்ள சாதக, பாதக நிலைமைகைள ஆராய்ந்து வருகிறோம். எனவே உரிய நேரத்தில் உரிய தீர்மானம் எடுக்கப்படும்.

இத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் தீவிரமாக ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதைப்பற்றி இன்னமும் ஒரு தீர்மானம் எடுக்கவில்லை. ஆகையினால் அது தொடர்பில் சரியான நேரத்தில் சரியான தீர்மானமொன்றை நாங்கள் எடுப்போம் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Wed, 01/22/2020 - 11:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை