தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதற்கு மாலிங்க தயார்

இலங்கை அணியின் தோல்விக்கு தனது தலைமையே காரணமெனில் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு தாம் தயாராக இருப்பதாக இலங்கை டி-20 அணித் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் இலங்கை அணி 2–0 என தொடரை முழுமையாக தொற்றதோடு, பந்துவீச்சு, துப்பாட்டத்தில் இலங்கை வீரர்கள் போதிய திறமையை வெளிப்படுத்தத் தவறினர்.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி நாடு திரும்பிய நிலையிலேயே 36 வயதான லசித் மாலிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை பந்துவீச்சாளர்கள் எதிரணியினரை மட்டுப்படுத்த தவறியதாகவும் துடுப்பாட்ட வீரர்கள் சவால் கொடுக்கும் அளவு 170 ஓட்டங்களை எடுக்கத் தவறியதாகவும் தெரிவித்துள்ளார். “எம்மிடம் அந்த திறன் இருக்கவில்லை” என்று கூறிய மாலிங்க, ஓர் ஆண்டுக்கு முன் அணியின் தலைமைப் பொறுப்புக்கு திரும்பியபோது உலகில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் அணி ஒன்றை கொண்டு வெற்றியை எதிர்பார்ப்பது நியாயமற்றது என்றார்.

எனினும் அணியின் செயற்பாடு பற்றி பொறுப்பேற்பதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் மாலிங்க கூறினார். “நான் எந்த நேரமும் தயாராக இருக்கிறேன். நான் பொறுப்பில் இருந்து விலக தயாராக உள்ளேன்” என்று அவர் கூறினார்.

2014 இல் டி-20 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கு தலைவராக மாலிங்க செயற்பட்டதோடு, 2016 ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் நீடித்தார்.

காயங்களுக்கு மத்தியில் அணியில் இடம் கிடைக்காமல் இருந்த மாலிங்க 2018 டிசம்பரில் மீண்டும் தலைமை பொறுப்புக்கு திரும்பினார். மாலிங்கவின் தலைமையின் கீழ் அணிக்குள் பிளவுகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

“அணிக்குள் பெரும் பிளவுகள் உள்ளன. அணித் தலைவராக அவர் திசர பெரேரா மற்றும் எஞ்சலோ மத்தியுஸ் உட்பட சிரேஷ் வீரர்களையும் ஒதுக்கியுள்ளார்” என்று இலங்கையில் இருந்து வெளியாகும் அங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குவஹாத்தியில் நடைபெறவிருந்த முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் ஏழு விக்கெட்டுகளாலும் மூன்றாவது போட்டியில் 78 ஓட்டங்களாலும் இந்திய அணி வெற்றியீட்டியது.

இந்த தொடர் குறித்து மாலிங்க முன்னதாக கருத்துக் கூறியபோது, “கடந்த காலங்களில் சங்கக்கார, ஜயவர்தன, டில்ஷான் ஆகியோருக்கு இன்னிங்ஸை எப்படி கட்டமைப்பது என்பது தெரிந்திருந்தது. தற்போது அணியில் உள்ள இளம் வீரர்கள் திறன் உள்ளவர்கள் தான். தங்களது ஆட்டத்தை விளையாட அவர்கள் விரும்புகின்றனர்.

ஆனால் சில நேரங்களில் அமைதியாக இருக்க வேண்டும், நிலைமையை கையாள வேண்டும். இந்த பகுதியில் அவர்கள் தாமதிக்கின்றனர். அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருந்தால் நிலைமையை அவர்கள் கையாள்வார்கள். அணித்தலைவர் பணி எளிதாக இருக்கும். ஆனால் அந்த வசதி தற்போது எனக்கு இல்லை. தற்போதுள்ள வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள். அவர்களை வழி நடத்துகிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

Mon, 01/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை