பக்தாதில் அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வாபஸ்

ஈராக் தலைநகர் பக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியில் முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வாபஸ் பெற்றுள்ளனர். ஹாஷ்ட் அல் ஷாபி துணைப் படையினரின் உத்தரவை அடுத்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேறியதை ஈராக் இராணுவம் கடந்த புதன்கிழமை உறுதி செய்தது.

பெரும்பாலும் ஈரானியர்களால் பயிற்சி பெற்ற குழுக்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க தூதரகத்தை சுற்றிவளைத்து தூதரகத்திற்கு சேதங்களை ஏற்படுத்தினர். ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் 25 ஈரான் ஆதரவு போராளிகள் கொல்லப்பட்டதற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தூதரகத்தை விட்டு வெளியேறும்படி, ஈராக்கின் பதில் பிரதமர் அதெல் அப்துல் மஹ்தி அழைப்பு விடுத்தபோதும், அந்த வளாகத்திற்கு வெளியில் கூடாரம் அமைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் இரவு முழுவதும் தங்கி இருந்தனர். இந்நிலையில் புதன்கிழமை காலையும் அமெரிக்க கொடிகளை எரித்தும் தூதரக வளாகத்திற்கு கற்களை எறிந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயன்றதில் குறைந்தது 20 பேர் காயமடைந்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர். தூதரக வளாகத்தில் இருந்து வெளியேறும்படி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஹாஷ்ட் அல் ஷாபி அமைப்பு உத்தரவிட்டது. “எமது செய்தியை கூறியாகிவிட்டது” என்று அந்த அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஹாஷ்ட் அமைப்புடன் தொடர்புடைய காதைப் ஹெஸ்புல்லா குழு மீதே அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியிருந்தது.

Fri, 01/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை