அவுஸ்திரேலிய காட்டுத் தீ: மேலும் 7 பேர் பலி: 200 வீடுகள் அழிவு

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடற்கரைகளை நோக்கி புதிதாக இந்தக் காட்டுத் தீ பரவி இருப்பதோடு இதனால் 200க்கும் அதிகமான வீடுகள் அழிந்துள்ளன.

தற்போது நிலைமை சற்று நல்ல நிலைக்குத் திரும்பியதோடு விக்டோரியா மாநிலத்தில் மூடப்பட்டிருக்கும் பிரதான வீதிகள் மக்கள் வெளியேறுவதற்காக நேற்று இரண்டு மணி நேரம் மாத்திரம் திறக்கப்பட்டது.

மக்கள் பலரும் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ளனர். ஒரு நகருக்கு படகு மூலம் 1.6 தொன் குடிநீர் வழங்கப்பட்டது.

இதில் கடந்த புதன்கிழமை காலை வெவ்வேறு கார் வண்டிகளில் இருவர் இறந்த நிலையில் நேற்றுக் காலை கண்டுபிடிக்கப்பட்டனர். தமது வீடு மற்றும் பண்ணைகளை பாதுகாப்பதற்காக தங்கி இருந்த தந்தை மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

அதேபோன்று 28 வயது தன்னார்வ தீயணைப்பு வீரர் ஒருவரும் நியூ செளத் வேல்ஸ் பிராந்தியத்தில் கடந்த இரு தினங்களில் உயிரிழந்த ஏழு பேரில் அடங்குகிறார்.

விக்டோரியா மாநிலத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி அவுஸ்திரேலியா எங்கும் நீடித்து வரும் காட்டுத் தீ தொடர்பான அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அச்சம் வெளியாகியுள்ளது. விக்டோரியா மாநிலத்தின் ஈஸ்ட்கிப்ஸ்லாண்ட் பகுதியில் 43 வீடுகள் தீயினால் அழிந்துள்ளன. அதேபோன்று நியூ சவுத் வேல்ஸில் 176 வீடுகள் அழிந்துள்ளன.

இந்தப் பருவத்தில் மொத்தம் 916 வீடுகள் அழிந்திருப்பதோடு, மேலும் 363 வீடுகள் சேதமாகி 8159 வீடுகள் தீயில் இருந்து பாதுகாக்கப்பட்டிருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் நகர்ப்புற தீயணைப்புச் சேவை நேற்று குறிப்பிட்டது.

விக்டோரியாவின் மல்லாகூடாவில் ஆயிரக்கணக்கானவர்கள் காட்டுத் தீயில் இருந்து தப்பி கடற்கரை பகுதியில் தஞ்சமடைந்திருக்கும் நிலையில் குடியிருப்பாளர்களுக்காக பொலிஸ் படகுகளில் 1.6 தொன் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை மெல்போர்னில் இருந்து வட மேற்காக 40 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் விக்டோரியா மாநிலத்தின் சன்புரி பகுதியில் இருந்து மக்களை வெளியேறும்படி பொலிஸார் எச்சரித்துள்ளனர். அங்கு அவசர தீ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மிதமிஞ்சிய வெப்பம் காரணமாகத் தினமும் புதிது புதிகாகப் பல இடங்களில் காடுகள் தாமாகவே பற்றி எரியத் தொடங்குகின்றன. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பற்றியுள்ளது.

சில தொலைதூர பகுதிகளை அடைய முடியாத நிலை இருப்பதாக தீயணைப்புச் சேவை எச்சரித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் வெப்ப நிலை அதிகரிக்க இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட காலநிலை மாற்றமே காரணம் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட பருவ நிலை மாற்றத்தால், காட்டு தீ மிகவும் எளிதாக பரவுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Thu, 01/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை