'ஈரானின் 52 தளங்கள் இலக்கு' டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

சுலைமானியின் இறுதிக் கிரியையில் மக்கள் வெள்ளம் பக்தாதில் அமெரிக்க தூதரகம் அருகில் ரொக்கெட் வீச்சு

அமெரிக்கர்கள் அல்லது அமெரிக்க சொத்துகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் ஈரானின் 52 தளங்கள் “கடுமையாகத் தாக்கப்படும்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானிய இராணுவத் தளபதி காசெம் சுலைமானி மற்றும் ஈரானிய ஆதரவு போராட்டக் குழு தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலை அடுத்து பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையிலேயே டிரம்ப் கடந்த சனிக்கிழமை இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

சுலைமானியின் இறுதிக் கிரியை நிகழ்வுகள் ஈரானில் நேற்று ஆரம்பமானதோடு அதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டனர். கொல்லப்பட்டவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் ஈராக்கிலும் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.

டிரம்பின் உத்தரவில் கடந்த வெள்ளிக்கிழமை பக்தாத் விமானநிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலிலேயே ஈரானின் உயர்நிலை குத்ஸ் படையின் தளபதி சுலைமானியுடன் ஈரான் ஆதரவு ஈராக்கிய போராட்டக் குழு தலைவர் அபூ மஹ்தி அல் முஹன்திஸ் கொல்லப்பட்டார்.

இதனால் ஏற்பட்ட பதற்றம் இன்னும் தனியாததற்கான சமிக்ஞையாகவே டிரம்ப் ட்விட்டர் மூலம் விடுத்திருக்கும் எச்சரிக்கை உள்ளது.

சுலைமானியின் மரணத்திற்கு பழிதீர்க்கும் வகையில் “அமெரிக்க சொத்துகளை இலக்கு வைப்பது குறித்து அது (ஈரான்) மிக தைரியமாக பேசி வருகிறது” என்று டிரம்ப் எழுதியுள்ளார். “அமெரிக்கா 52 ஈரானிய தளங்களை இலக்குவைத்துள்ளது. அவைகளில் சில ஈரான் மற்றும் ஈரானிய கலாசாரத்திற்கு மிக உயர் நிலையானதும் முக்கியமானதுமாக உள்ளன. ஈரான் மிக வேகமாகவும் கடுமையாகவும் தாக்கப்படும்” என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

“அமெரிக்கா மேலும் எச்சரிக்கைகளை விரும்பவில்லை” என்று குறிப்பிட்ட டிரம்ப், 52 இலக்குகளானது 1979 நவம்பரில் டெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றி 444 நாட்கள் 52 அமெரிக்கர்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைத்ததை பிரதிநிதித்துவப் படுத்துவதாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார். இந்த சம்பவத்தை அடுத்தே அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராஜதந்திர உறவுகள் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் அமெரிக்கா இலக்கு வைத்திருக்கும் தளங்கள் குறித்து டிரம்ப் வேறு எந்த கருத்தும் கூறவில்லை. இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகனும் உடன் எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.

இந்த பதற்றத்திற்கு மத்தியில் 3,000 மேலதிக துருப்புகளை மத்திய கிழக்கிற்கு அனுப்பி இருக்கும் அமெரிக்கா, ஈராக்கில் இருக்கும் தமது பிரஜைகள் உடன் அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஈராக்கில் இடம்பெற்ற பேரணியில் போராளிகளின் சீருடை அணிந்தவர்கள் கொல்லப்பட்ட முஹன்திஸ் மற்றும் சுலைமானிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அவர்கள் இந்த இருவரதும் உருவப்படங்களை ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர். ஆயுதம் ஏந்தியவர்களும் பங்கேற்ற இந்தப் பேரணியில், “அமெரிக்கா ஒழிக” மற்றும் “இஸ்ரேல் வேண்டாம்” என்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.

ஈராக் தலைநகர் பக்தாதின் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகில் கடந்த சனிக்கிழமை ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தன. மேலும் ஒரு ரொக்கெட் குண்டு அண்டைய பகுதியான ஜட்ரியாவில் விழுந்ததோடு நகரின் வடக்காக இருக்கும் பலத் விமானத் தளத்தின் மீது மேலும் இரு ரொக்கெட் குண்டுகள் விழுந்தன. எனினும் இந்தத் தாக்குதல்களால் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்று ஈராக் இராணுவம் கூறியது. இந்த தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் உடன் பொறுப்பேற்கவில்லை.

இதில் அமெரிக்காவின் 35 இலக்குகள் பற்றி ஈரான் புரட்சிக் காவல் படையின் மூத்த தளபதி ஒருவர் எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே டிரம்ப் மேற்படி எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய குடியரசினால் அடைய முடியுமான எந்த ஒரு இலக்கில் இருக்கும் அமெரிக்கர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று ஜெனரல் கொலமாலி அபூஹம்சா கடந்த வெள்ளிக்கிழமை எச்சரித்திருந்தார். வளைகுடாவில் இருக்கும் கப்பல்கள் தாக்கப்படும் சாத்தியம் குறித்தும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

“மெற்குலகம் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான அமெரிக்க போர் கப்பல்களுக்கான பிரதான இடமாக ஹார்மூஸ் நீரிணை உள்ளது. பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் முக்கிய இலக்குகளை ஈரான் நீண்ட காலத்திற்கு முன்னரே அடையாளம் கண்டுள்ளது. பிராந்தியத்தில் சுமார் 35 அமெரிக்க இலக்குகள் அதேபோன்று டெல் அவிவ் எம்மால் அடைய முடியுமானவையாக உள்ளன” என்று அவர் டஸ்மின் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டிருந்தார்.

ஈராக்கில் இருக்கும் அமெரிக்கத் தளங்களில் இருந்து விலகி இருக்கும்படி ஈராக் இராணுவத்திற்கு காதைப் ஹிஸ்புல்லா போராளிகள் எச்சரித்துள்ளனர். “ஞாயிறு மாலை தொடக்கம் இடைவெளி ஆயிரம் மீற்றருக்கும் குறைவானது” என்று லெபனானின் அல் மைதீன் தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.

சுலைமானி அமெரிக்க இராஜதந்திரிகள் மற்றும் இராணுவத்தினர் மீது விரைவான மற்றும் மோமசமான தாக்குதல்களை நடத்த திட்டம் வகுத்ததாக டிரம்ப் வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார். ஆபாயம் கொண்ட பிராந்தியம் ஒன்றில் மேலும் இரத்தம் சிந்தும் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான செயலில் ஈடுபட்டிருப்பதாக ஜனநாயகக் கட்சியினர் குடியரசு கட்சியின் டிரம்ப்பை விமர்சித்துள்ளனர்.

எனினும் பதற்றத்தை தணிப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ ஈராக் ஜனாதிபதியிடம் உறுதி அளித்து சில மணி நேரத்திலேயே டிரம்ப், ஈரானை எச்சரித்து ட்விட்டர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுடனும் பேசியதாக பொம்பியோ ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். “ஈரானின் மோசமான செல்வாக்கு மற்றும் பிராந்தியத்தில் உள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்து அந்தப் பேச்சில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது” என்று பொம்பியோ குறிப்பிட்டார்.

சட்டத் தேவைக்கு அமைவாக ஆளில்லா வான் தாக்குதல் குறித்து அமெரிக்க பாராளுமன்றத்திற்கு வெள்ளை மாளிகை கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

எனினும் இந்தத் தாக்குதல் பற்றி எம்.பிக்களை அறிவுறுத்தவில்லை என்றும் அல்லது முன்கூட்டிய அனுமதியை பெறவில்லை என்றும் ஜனநாயகக் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் இந்தத் தாக்குதலின் சட்டபூர்வத் தன்மையை வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபர்ட் ஓ பிரைன் காத்துப் பேசியதோடு இந்த திட்டத்திற்கு நீதித் திணைக்கள சட்டத்தரணிகள் ஒப்புதல் அளித்ததாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் பாதுகாப்பு அச்சம் காரணமாக நேட்டோ கூட்டணி ஈராக் பாதுகாப்பு படையினருக்கு வழங்கும் பயிற்சிகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

கொல்லப்பட்ட 62 வயதான சுலைமானி ஈரானின் மிக முக்கிய இராணுவத் தலைவர் என்பதோடு புரட்சிக் காவல் படையின் வெளிநாட்டுப் பிரிவான குத்ஸ் படையின் தளபதியாவார். மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கை கட்டியெழுப்பியவராகவும் அவர் உள்ளார்.

அமெரிக்கா தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றையவரான முஹன்திஸ் ஈராக்கின் துணைப்படை பிரிவின் செல்வாக்கு மிக்க தலைவராவார்

இந்தத் தாக்குதலானது அமெரிக்கா மற்றும் பிராந்தியத்தில் அதன் கூட்டணிகளான இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியா ஆகியன முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஈரானுடன் ஒரு போர் சூழுலுக்கு முகம்கொடுப்பதாக உள்ளது.

2003 ஆம் ஆண்டு ஈராக் மீது படையெடுத்து அந்நாட்டு சர்வாதிகார தலைவரான சதாம் ஹுஸைனை பதவி கவிழ்த்தது தொடக்கம் ஈராக் மற்றும் அமெரிக்கா நட்பு நாடுகளாக இருந்தபோதும் ஈராக் அண்டை நாடான ஈரானுடன் அதிக நெருக்கமான உறவை கொண்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் இருந்து அமெரிக்க துருப்புகளை வெளியேற்றுவது குறித்து வாக்கெடுப்பை நடத்த வழக்கத்திற்கு மாறான பாராளுமன்ற அமர்வொன்றை ஈராக் நடத்தவிருந்தது. சுலைமானிக்கு எதிரானவர்கள் உட்பட பெரும்பாலான ஈராக்கியர் ஈராக் மண்ணில் அமெரிக்கா மேற்கொண்ட இந்த கொலைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஈராக்கை மற்றுமொரு போருக்கு இட்டுச் செல்லும் செயலாக அவர்கள் கருதுகின்றனர்.

இதேவேளை சுலைமானியின் உடல் நேற்று ஈரானை சென்றடைந்ததோடு அஹ்வாஸ் நகரில் ஆரம்பமான இறுதிக் கிரியை நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

இறுதிக் கிரியையில் பங்கேற்றவர்கள் தங்களின் நெஞ்சில் அடித்தபடி “அமெரிக்கா ஒழிக” என்று கோசமெழுப்பினர்.

ஈரானிய கொடி போர்த்தப்பட்ட சுலைமானியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி நேற்று அதிகாலை அஹ்வாஸ் நகருக்கு கொண்டுவரப்பட்டது. அங்குள்ள மொல்லாவி சதுக்கத்தில் ஒன்று திரண்ட மக்கள் ஈரானிய தேசிய கொடியையும், சுலைமானியின் புகைப்படங்களையும் ஏந்தி இருந்தனர். ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லாஹ் கமெனிக்கு நெருக்கமானவரான சுலைமானி, ஈரான் – ஈராக் யுத்தத்தில் படை வீரராக அவரது பங்கு குறித்து ஈரான் மக்களிடையே அதிக மதிப்புப் பெற்றவராக உள்ளார்.

மறுபுறம் தலைநகர் டெஹ்ரானில் இடம்பெற்ற பாராளுமன்றக் கூட்டத்தில் எம்.பிக்கள், “அமெரிக்க ஒழிக” என்று ஒருசில நிமிடங்கள் கோசம் எழுப்பினர். “டிரம்ப் கேட்கவும், இது ஈரானிய தேசத்தின் குரல்” என்று சபாநாயகர் அலி லர்ஜானி குறிப்பிட்டார்.

இந்த ஆளில்லா வான் தாக்குதலில் கொல்லப்பட்ட மேலும் ஐந்து ஈரானியர்களின் உடல்களுடனேயே நேற்று சுலைமானியின் உடல் ஈராக்கில் இருந்து ஈரானுக்கு கொண்டுவரப்பட்டது.

டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெறும் சுலைமானியின் இறுதிக் கிரியையில் உயர்மட்டத் தலைவர் தொழுகை நடத்தவுள்ளார். பின்னர் புனித நகரான கூம்மிற்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு சொந்த நகரான கர்மானில் நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Mon, 01/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை