நெல் நேரடி கொள்வனவு; ரூ. 50 உத்தரவாத விலை

*கொள்வனவில் தனியாரையும் ஈடுபடுத்த சலுகைக் கடன்

*ஈரத் தன்மையுடனான நெல்லுக்கு ஆகக்கூடிய விலை 45 ரூபா

விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் 50 ரூபா உத்தரவாத விலையை நிர்ணயித்துள்ளது. நெல்லின் விலையில் ஸ்திரத்தன்மையை முன்னெடுத்தல் மற்றும் நியாயமான விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக தனியார் துறையை ஊக்குவிப்பதற்காக சலுகை கடன் வழங்கவும் மேலதிக நெல்லை கொள்வனவு செய்வதற்காக தலையீடு செய்யவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பொருட்களின் விலைகள் உயரும் போது ஐ.தே.க அரசில் அவற்றை இறக்குமதி செய்யும் கொள்கையே பின்பற்றப்பட்டது.எமது அரசு அரிசி இறக்குமதி செய்யாதிருக்க முடிவு செய்ததன் மூலம் 100 மில்லியன் டொலர்களை சேமிக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அவர் இவற்றை குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

இம்முறை பெரும்போகத்தின் போது 3 மில்லியன் மெற்றிக் தொன் அறுவடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அரிசியை இறக்குமதி செய்வதில்லை என கொள்கை ரீதியில் அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில் அரிசி விலை ஓரளவிற்கு அதிகரித்திருந்த போதிலும் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு நாணயமாக சேமிப்பதற்கு முடிந்துள்ளது.

இந்த நிலை வெளிநாட்டு நாணய விகிதத்தின் ஸ்திரத்தன்மையைப் போன்று வட்டி விகிதத்தையும் குறைப்பதற்கான அழுத்தமும் இடம்பெற்றுள்ளது. இதற்கு அமைவாக நெல்லின் விலையில் ஸ்திரத்தன்மையை முன்னெடுத்தல் மற்றும் நியாயமான விலையில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்காக தனியார் துறையில் அரிசி உரிமையாளர்களை ஊக்குவிக்க இருக்கிறோம்.

இதற்காக 2019/ 20 பெரும்போகத்தில் மேலதிக நெல்லை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் தலையிட வேண்டும் என்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக கீழ் கண்ட நடவடிக்கைகளை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உரிய தரத்திலான ஒரு கிலோ நெல்லுக்கு ஆக கூடிய உத்தரவாத விலை 50 ரூபா. ஈரத்தன்மையுடனான ஒரு கிலோ நெல்லின் ஆக கூடிய விலை 45 ரூபா.

அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தை மாவட்ட செயலாளர்கள் மற்றும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் மூலம் நடைமுறைப்படுத்தும். முப்படை, சிறைச்சாலை திணைக்களம், வைத்தியசாலைகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் நிறுவனங்களுக்கு தமது தேவைக்கேற்ப அரிசியை நேரடியாக கொள்வனவு செய்ய முடியும்.

கொள்வனவு செய்யப்படும் அனைத்து நெல்லையும் களஞ்சியப்படுத்துவதற்கான பணிகளை உணவு ஆணையாளரின் கீழுள்ள அனைத்து களஞ்சியங்கள், நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக கையளிக்கவும் முடிவு.

நெல்லை ஏற்றிச்செல்லும் பணிகளுக்காக அரசாங்கத்தின் வசமுள்ள லொறி மற்றும் ட்ரக் வாகனங்களைப் பயன்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உத்தரவாத விலையின் கீழ் நெல்லை கொள்வனவு செய்வதற்காக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மற்றும் பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட நெல்லை கொள்வனவு செய்வோர்களுக்கு 8 சதவீத சலுகை வட்டி அடிப்படையில் 100 மில்லியன் ரூபா கடன் அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஊடாக வழங்கவும் அனுமதி.

பிரதானமாக அரிசி உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்களான பொலன்னறுவை, அனுராதபுரம், குருநாகல், வவுனியா, அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் நெல்லை கொள்வனவு செய்யும் திட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பை அரசாங்கம் சில இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளது.

தற்போது அமுலிலுள்ள அரிசியின் உத்தரவாத விலை முழுமையாக செயற்படுத்தப்படுத்தப்படுகிறதா என கவனம் செலுத்தப்படும். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினூடாக சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும். எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டின் போது அரிசி விலை 90 ரூபா வரை வீழ்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

Fri, 01/24/2020 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக