சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் கூட்ட நெரிசல்: 40 பேர் உயிரிழப்பு

சொந்த ஊரில் நல்லடக்கம்

அமெரிக்க வான் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய இராணுவத் தளபதியின் இறுதிக் கிரியையில் கர்மான் நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மேலும் 213 பேர் காயமடைந்திருப்பதாக ஈரான் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் பலம் மிக்க குத்ஸ் படையின் தளபதி கசெம் சுலைமானியின் உடல் அவரது சொந்த ஊரான கர்மானில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிக் கிரியையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டனர்.

ஈராக் தலைநகர் பக்தாத் விமான நிலையத்திற்கு அருகில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் கடந்த வெள்ளிக்கிழமை சுலைமானி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்ற நிலையை அதிகரித்திருப்பதோடு பிராந்தியத்தில் போர் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சுலைமானியின் இறுதிக் கிரியையில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம் திரண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இதனால் ஏற்பட்டிருக்கும் நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வீதி ஒன்றில் வைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

“துரதிருஷ்டவசமாக இறுதிக் கரியையின்போது ஏற்பட்ட இந்த நெரிசலில் எமது மக்கள் சிலர் உயிரிழந்ததோடு மேலுத் சிலர் காயமடைந்தனர்” என்று ஈரான் அவசர மருத்துவ சேவை பிரிவு தலைவர் பிர்ஹொஸைன் குலிவாண்ட் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த திங்கட்கிழமை சுலைமானியின் இறுதி ஊர்வலம் தலைநகர் டெஹ்ரானில் இடம்பெற்றபோது மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஒன்று திரண்டனர். இந்த மக்கள் வெள்ளம் செய்மதிப் படங்கள் மூலம் கூட பார்க்க முடியுமான அளவு பெரிதாக இருந்தது.

ஈரான் உயர்மட்ட தலைவர் ஆயதொல்லாஹ் அலி கமனெவுக்கு அடுத்து நாட்டின் செல்வாக்கு மிக்கவராக இருந்த சுலைமானியின் இறுதி ஊர்வலங்கள் நாட்டின் மேலும் பல நகரங்களில் இடம்பெற்றன. இறுதி ஊர்வலங்களில் பங்கேற்றவர்கள் “அமெரிக்கா ஒழிக”, “டிரம்ப ஒழிக” என்று கோசங்களை எழுப்பினர்.

சுலைமானியின் கொலைக்கு பழிதீர்ப்பது குறித்து ஈரான் உயர்மட்டத் தலைவர், இராணுவத் தளபதிகள் கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 01/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை