சூடானில் ஆசிரியரைக் கொன்ற 29 பேருக்கு மரண தண்டனை

ஆசிரியர் ஒருவரை சித்திரவதை செய்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் சூடானில் உளவுப் பிரிவைச் சேர்ந்த 29 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரியில் அப்போதைய ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 36 வயது அஹமது அல் கைர் கைதுசெய்யப்பட்ட நிலையில் தடுப்புக்காவலில் உயிரிழந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஒமர் அல் பஷீர் பதவி கவிழ்க்கப்படுவதற்கு காரணமான ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட முதல் தண்டனையாக இது உள்ளது.

மரண தண்டனை நியாயமான ஒரு தண்டனை என்று அரச வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இந்த தண்டனை விதிக்கப்பட்ட பின் கொல்லப்பட்ட அல் கைர்ரின் சகோதரரிடம் 29 பேருக்கும் மன்னிப்பு அளிப்பது குறித்து நீதிபதி கேட்டபோதும் அதனை மறுத்து அவர்களை தூக்கிலிடும்படி கேட்டுக்கொண்டார்.

இதற்கு எதிராக மேன்முறையீடு செய்வதாக பிரதிவாதிகள் தரப்பிலான வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டார்.

Wed, 01/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை