இந்தோனேசிய தலைநகரில் திடீர் வெள்ளம்: 21 பேர் பலி

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இடம்பெற்ற கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குறைந்தது 21 பேர் உயிரிழந்திருப்பதோடு ஆயிரக்கணக்கானவர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

கிழக்கு ஜகார்த்தாவில் ஒரு நாளில் 377 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவானதாக வானிலை, காலநிலை மற்றும் புவியியல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மழைவீழ்ச்சி தொடர்பான பதிவுகள் ஆரம்பிக்கப்பட்ட 1996 ஆம் ஆண்டு தொடக்கம் ஒற்றை நாளில் ஏற்பட்ட அதிக மழைவீழ்ச்சி இதுவென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“புத்தாண்டு தினத்தில் பெய்த மழை சாதாரண மழையல்ல” என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மழை காரணமாக புறநகர் பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டிருப்பதோடு, நகர மையப்பகுதிகளில் வெள்ளத்தால் வீடுகள் மூழ்கியுள்ளன. இதில் 8 தொடக்கம் 82 வயது வரையானோர் உயிரிழந்துள்ளனர்.

சிலர் வெப்பக் குறைவு காரணமாக உயிரிழந்திருப்பதோடு, நீரில் மூழ்கியும் நிலச்சரிவு காரணமாகவும் மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர்.

16 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான்.

2013 ஆம் ஆண்டு தலைநகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் 47 பேர் உயிரிழந்ததோடு 2007 ஆம் ஆண்டில் 50 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

ஆண்டின் இந்தக் காலப்பகுதியில் ஜக்கார்த்தாவில் வெள்ளம் ஏற்படுவது வழக்கமாகும். இதன் காரணமாகவே அடுத்த ஒருசில தினங்களில் தலைநகரை கிழக்கு போர்னியோவுக்கு மாற்ற ஜனாதிபதி ஜோகோ விடோடா திட்டமிட்டுள்ளார்.

உலகில் வேகமாக நீரில் மூழ்கி வரும் நகரங்களில் ஒன்றாக ஜகார்த்தா உள்ளது. 2050இல் இந்த நகரில் முழுமையாக மூழ்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Fri, 01/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை