2 மணிநேரத்தில் சாரதி அனுமதிபத்திரம் ஐந்து நிமிடங்களுக்கு முன் குறுந்தகவல்

வேரஹெர அலுவலகத்திற்கு அமைச்சர் அமரவீர திடீர் விஜயம்

வெரஹேர மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளவரும் பொது மக்களுக்கான சேவைகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் திடீர் ஆய்வு விஜயத்தைத் தொடர்ந்து திணைக்களத்தின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தாகவும் அவர் கூறியுள்ளார். நேற்றுமுன்தினம் பி.ப. வெரஹேர மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்குச்  சென்ற அமைச்சர், பணிகள் தொடர்பில் ஆய்வுக்குட்படுத்தினார். இதன்போது சேவைகள் தொடர்பிலும் பொது மக்களிடமும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

அதன் அடிப்படையில் சாரதி அனுமதிப்பத்திரம் உரிய ஆவணங்கள் பூரணப்படுத்தப்பட்ட இரண்டு மணித்தியாலங்களில் வழங்கப்படுவதாகவும், சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னர் குறுஞ் செய்தியொன்றும் அனுப்பப் படுவதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் அண்மையில் அமைச்சின் அதிகாரிகளுக்கும், திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்மொழியப்பட்ட விடயங்களையும் உடனடியாக அமுல்படுத்துமாறு திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

சாரதி அனுமதிப் பத்திரங்ளைப் பெறுவது, மின்-மோட்டார் திட்டத்தை விரைவுபடுத்துவது, மருத்துவ சான்றிதழ்களை துரிதமாக பெறுவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

ஓட்டுநர் பயிற்சி பாடசாலைகளிலிருந்து உரிமம் பெற்றுக்கொள்ள வருபவர்களுக்கு முன்னுரிமையளிக்காது பொதுமக்கள் வழங்கும் "டோக்கன்' எண்ணுக்கு முன்னுரிமை கொடுக்கவும் உத்தரவிடப்பட்டது.

சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்காக வெளிநாட்டவர்கள் அதிகம் பணம் செலுத்துவதால்,துரிதமாக அவற்றை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதல், தரவு முறையை பராமரித்தல் தொடர்பில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டுடன் காலவதியாகியது. அதன் பின்னர் இச்செயற்பாட்டுக்காக பாரிய நிதி செலவிடப் பட்டுள்ளது. இதுதொடர்பில் விசாரணை செய்ய குழுவொன்று நியமிக்கப்படும்.

Thu, 01/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை