சீனாவில் மர்ம வைரஸ்: மேலும் 17 பேர் பாதிப்பு

சீனாவில் பரவி வரும் சார்ஸ் போன்ற மர்ம வைரஸினால் மேலும் 17 பேர் பாதிப்புற்றிருப்பதோடு மூவரின் நிலை மோசமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் சந்திரப் புத்தாண்டை ஒட்டி மில்லியன் கணக்கான மக்கள் நாடெங்கும் இடம்பெயரவிருக்கும் நிலையில் இந்த வைரஸ் வேகமாக பரவும் ஆபத்துப் பற்றி எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கொரோனா வைரஸ் கடுமையான சுவாச நோய்க் குறிகளை வெளிப்படுத்துவதே இதன் மீதான அச்சம் அதிகரிக்கக் காரணமாகும். இவ்வாறான நோய்க் குறியால் 2002–2003 ஆம் ஆண்டுகளில் சீனா மற்றும் ஹொங்கொங்கில் சுமார் 650 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மத்திய நகரான வூஹானிலேயே புதிதாக 17 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ளது. இந்த பகுதி நோய்த் தொற்றின் மையமாக நம்பப் படுகிறது.

வுஹானில் 62 பேருக்கு இந்த நோய் தொற்றி இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எட்டுப் பேர் மோசமான நிலையில் இருப்பதோடு 19 பேர் சுகம்பெற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர். எஞ்சியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தீவிர நுரையீரல் நோயை உருவாக்கி வருகிறது. இதுவரை இதனால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்தில் இருவரும், ஜப்பானில் ஒருவருக்கும் இந்த வைரஸ் பரவி இருப்பது தெரியவந்தது. இது கவலை அளிக்கும் விதமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ்கள் என்பது பெரிய வைரஸ் குடும்பம். இதில் மனிதர்களை பாதிக்கக்கூடியவையாக ஆறு வகை வைரஸ் இருந்தன, தற்போது இந்த மர்ம வைரஸ் ஏழாவது வகையாக இருக்கக்கூடும்.

சீனா மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவை இந்த தொற்று, கொரோனா வைரஸ் என முடிவுக்கு வந்துள்ளன.

இந்த புது வைரஸின் மரபணு குறிமுறை கிட்டத்தட்ட சார்ஸ் வைரஸுக்கு நெருக்கமானது போன்று உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். சார்ஸ் என்பது மனிதர்களை பாதிக்கும் கொரோனா வைரஸின் ஒரு வகை என்பது குறிப்பிடத்தக்கது.

Mon, 01/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை