பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிப்பு: 16,000 பேர் வெளியேற்றம்

அபாய விளைவு குறித்து எச்சரிக்கை; விமானங்கள் ரத்து

பிலிப்பைன்சின் எரிமலை ஒன்று லாவா குழம்புகளை கக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், ஒருசில மணி நேரம் அல்லது நாட்களில் அபாயகரமான வெடிப்பு ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் மனிலாவின் தெற்காக 70 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் ‘தால்’ எரிமலை நேற்று அதிகாலை லாவா குழம்புகளை உமிழ்வதற்கு ஆரம்பித்துள்ளது.

இந்த எரிமலை பெரும் அளவு சாம்பல் புகையை வெளியிட ஆரம்பித்ததை அடுத்து அதனை சூழவிருக்கும் 16,000 பேர் வரை அப்புறப்படுத்தப்பட்ட நிலையிலேயே அந்த எரிமலை மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

தால் பிலிப்பைன்ஸில் இயக்கத்துடன் உள்ள இரண்டாவது எரிமலையாகும்.

ஏரி ஒன்றின் நடுவில் அமைந்திருக்கும் இந்த எரிமலை, உலகின் மிகச் சிறிய எரிமலைகளில் ஒன்றாகும். கடந்த 450 ஆண்டுகளில் இந்த எரிமலை குறைந்தது 34 தடவைகள் வெடித்துள்ளது.

“இந்த எரிமலை தீவிர அமைதியின்மை நிலையை எட்டியுள்ளது. இது எரிமலை வெடிப்பாக மாறியுள்ளது. இதனால் இடிமின்னலுடன் பலவீனமான எரிமலை குழம்பை உமிழ்கிறது” என்று எரிமலை மற்றும் நில அதிர்வுக்கான பிலிப்பைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த சூழல் ஓர் அபாயகரமான வெடிப்புக்கான ஆபத்தை அதிகரித்திருப்பதாக மேற்படி நிறுவனத்தின் பணிப்பாளர் ரெனாடோ சொலிடும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் எரிமலை மற்றும் நில அதிர்வுக்காக பிலிப்பைன்ஸ் நிறுவனம் அபாய நிலையை 3 இல் இருந்து 4 ஆக அதிகரித்துள்ளது.

எரிமலை வெடிப்பினால் மண் சரிவு ஏற்பட்டு உருவாகும் பாரிய அலைகளைக் கொண்ட “எரிமலை சுனாமி” பற்றியும் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தால் எரிமலை பெரும் சத்தம் மற்றும் அதிர்வுடன் சாம்பல் புகையை வெளியிட ஆரம்பித்தது. இதனால் அந்தப் பிராந்தியத்தைச் சூழ மொத்தம் 75 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

தால் எரிமலையின் 14 கிலோமீற்றர் சூழவிருக்கும் அபாய வலயத்திற்குள் 450,000க்கும் அதிகமான மக்கள் வாழ்வதாக மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் சுமார் ஒரு கிலோ மீற்றர் உயரத்திற்கு வீசப்படுவதால் காற்றின்வேகத்தில் பல கிலோ மீற்றர் தூரத்திற்கு பரவி வருகிறது.

அருகாமையில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் சாம்பல் பொழிந்துவரும் நிலையில் மக்கள் சுவாச முகத்திரைகளை அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைகளில் அவ்வாறான முகத்திரைகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சாம்பல் தவிர எரிமலையில் இருந்து வீசி எறியப்படும் கொல்ப் பந்து அளவான பெரிய துண்டுகளும் எரிமலையைச் சூழ உள்ள பகுதிகளில் விழுவதாக அங்கிருப்போர் கூறுகின்றனர்.

இந்த எரிமலை வெடிப்பினால் மனிலா சர்வதேச விமானநிலையத்தின் அனைத்து விமானப் பயணங்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரத்துச் செய்யப்பட்டுள்ளன. “எரிமலையினால் வானில் ஏற்பட்டிருக்கும் சாம்பல் மற்றும் துண்டுகள் விமானங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்” என அஞ்சப்படுகிறது.

பிராந்தியத்தைச் சூழவிருக்கும் பாடசாலைகள் நேற்று மூடப்பட்டதோடு தலைநகர் மனிலாவில் சில அரச அலுவலகங்களும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டன.

கடைசியாக ‘தால்’ எரிமலை 1977ஆம் ஆண்டு வெடித்தது. 1911 ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்தபோது 1500 பேர் வரை கொல்லப்பட்டனர்.

ஆண்டு தோறும் கிட்டத்தட்ட 20 சூறாவளிகளாலும், பல எரிமலை சீற்றங்களாலும் பாதிக்கப்பட்டு வரும் பிலிப்பைன்ஸ் நாடு பசுபிக் சமுத்திரத்தின் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது.

மனிலாவில் இருந்து வட மேற்காக சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பினடுபோ எரிமலையில் 1991 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெடிப்பே அண்மையில் இடம்பெற்ற சக்திவாய்ந்த எரிமலை வெடிப்பாக இருந்தது. இதில் 800க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

Tue, 01/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை