விழுந்து நொறுங்கியது 'வை-12' ரக விமானம்

விமானப்படை வீரர்கள் நால்வர் பலி

ஹப்புத்தளையில் கோரம்

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான Y-12 ரக விமானம் நேற்று காலை ஹப்புத்தளை பிரதேசத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வீரவில விமானப்படைத் தளத்திலிருந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த நிலையிலேயே காலை சுமார் 09.15 மணியளவில் தம்பிப்பிள்ளை மாவத்தையிலுள்ள மலை பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ண தெரிவித்தார்.

விபத்தில் விமானத்தில் பயணித்த நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்களில் விமானத்தைச் செலுத்திச் சென்ற விமானியான  ஸ்கொட்ரன் லீடர் டபிள்யு.ஏ.எம் .பீ.என் புத்தி வீபெத்த, உதவி விமானியான பிளைட் லெப்டினன்ட் கே.எம்.டி லங்கா புரகுலதுங்க, விமானப் படையின் கண்காணிப்பு வீரர்களான சார்ஜன்ட் டி.டபிள்யூ.ஆர்.டபிள்யூ குமார மற்றும் லீடிங் எயார் கிராப்ட்மென் ஹெட்டியாராச்சி ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளான பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த விபத்துச் சம்பவத்தினால் காயமுற்ற நிலையில் ஹம்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் ஆராயும் பொருட்டு விமானப் படையின் விஷேட விசாரணைக் குழு சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து விபத்துக்கான காரணங்கள் தொடர்பான விசாரனைகளை ஆரம்பித்துள்ளது.

விமானம் திடீரென விபத்துக்குள்ளாகியதால் ஏற்பட்ட பாரிய சத்தத்தினால் அந்த பிரதேசத்தில் சிறிது நேரம் பதற்ற நிலைமை காணப்பட்டதுடன் பிரதேசம் எங்கும் பாரிய புகை மண்டலமாக காட்சியளித்தது. பிரதேச வாசிகள் மற்றும் ஹப்புத்தளை பொலிஸார் இணைந்து விபத்தினால் சிதறி காணப்பட்ட விமான பாகங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர்.

விபத்துச் சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸாதிக் ஷிஹான், ஹற்றன் சுழற்சி நிருபர்

 

Sat, 01/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை