கொரோனா வைரஸ் உயிரிழப்பு சீனாவில் 100ஐ தாண்டியது

நோய் பரவல் இரட்டிப்பானது

புதிய கொரோனா வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்திருப்பதோடு ஒரு தினத்திற்குள் நோய் தொற்றியவர்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன்படி சீனாவில் புதிய வைரஸ் தொற்றியவர்கள் எண்ணிக்கை கடந்த ஜனவரி 27 ஆம் திகதி ஆகும் போது 4,515 ஆக அதிகரித்திருப்பதோடு அதற்கு முந்திய தினத்தில் இந்த எண்ணிக்கை 2,835 ஆக இருந்தது.

இந்த வைரஸ் தொற்றின் மையமாக இருக்கும் வுஹான் நகரில் இருந்து தனது மக்களை வெளியேற்றுவதற்கு ஜப்பான் அந்த நகருக்கு பிரத்தியேக விமானம் ஒன்றை அனுப்பவுள்ளது. மேலும் பல நாடுகளும் அந்த நகரில் இருந்து தமது பிரஜைகளை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த வைரஸ் சீனா எங்கும் பரவி இருப்பதோடு உலகெங்கும் குறைந்தது 16 நாடுகளில் பரவியுள்ளது.

வுஹானை தலைநகராகக் கொண்ட ஹுபெய் மாகாணம் ஏற்கனவே நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு கடும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் முகக் கவசம் அணிவது சீனாவின் சில நகரங்களில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றிய 50 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்திருப்பதை பீஜிங் நிர்வாகம் கடந்த திங்கட்கிழமை உறுதி செய்துள்ளது. சீனத் தலைநகரில் இந்த வைரஸினால் நிகழ்ந்த முதல் உயிரிழப்பாக இது உள்ளது.

கடுமையான சுவாச நோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்துகள் அல்லது தடுப்பு முறைகள் இல்லை.

இதனால் ஹுபெய் மாகாணத்திலேயே அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே சுவாசப் பிரச்சினைகள் இருப்பவர்களே உயிரிழந்துள்ளனர்.

இந்த நோயில் இருந்து சுகம் பெற்று மொத்தம் 60 பேர் மருத்துவமனையில் இருந்த வெளியேறிச் சென்றிருப்பதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தடுப்பு நடவடிக்கைகள்

சீனாவில் மில்லியன் கணக்கான மக்கள் தமது சொந்த ஊர் மற்றும் உறவினர்களை பார்க்கச் செல்லும் சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டம் இடம்பெறும் நேரத்திலேயே புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.

இந்தத் தொற்று பரவுவதை தடுக்கும் முயற்சியாக பல புத்தாண்டு நிகழ்ச்சிகளும் ரத்துச் செய்யப்பட்டு விடுமுறைக் காலமும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அண்மைய தினங்களில் சீன நிர்வாகம் மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது,

l ஹுபெய் மாகாணத்தில் இருந்து வருபவர்களுக்கு 14 நாள் காண்காணிப்புக் காலத்தை பீஜிங் மற்றும் சங்காய் நகரங்கள் அமுல்படுத்தியுள்ளன.

l மீள ஆரம்பிக்கும் திகதி குறிப்பிடப்படாமல் தேசிய அளவில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களின் புதிய தவணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

l நாடெங்கும் பல ரயில் போக்குவரத்து சேவைகளை சீன ரயில்வே குழு இடைநிறுத்தியுள்ளது.

l எல்லை கடக்கும் செயற்பாடுகளை குறைக்கும் வகையில் வெளிநாட்டு பயணங்கள் செல்லும் காலத்தை மீள் பரிசீலனை செய்யும்படி சீன குடிவரவு குடியகல்வு நிர்வாகம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

11 மில்லியன் மக்கள் வசிக்கும் வுஹான் நகரில் அவசியமற்ற வாகனப் போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நகர் மூடப்படுவதற்கு முன்னர் அங்கிருந்து புத்தாண்டை ஒட்டி சுமார் ஐந்து மில்லியன் பேர் வெளியேறி இருப்பதாக வுஹான் நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.

பல நகரங்களிலும் பொது போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சங்காய் மற்றும் ஹொங்கொங்கில் உள்ள டிஸ்னிலான்ட் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை

புதிய வைரஸை கட்டுப்படுத்தும் திறன் சீனாவிடம் இருப்பதாக பீஜிங் சென்றிருக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரொஸ் அதனொம் கெப்ரியேசுஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் இருமுறை சந்தித்து பேசிய போதும் அதனை ஒரு சர்வதேச சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்வதை தவிர்த்துக்கொண்டது.

சீனாவுக்கு வெளியில் இந்த வைரஸ் தொற்றிய பல சம்பவங்கள் பதிவானபோதும் அவர்கள் அனைவரும்போல் அண்மையில் சீனாவில் இருந்து பயணித்தவர்களாவர். வெளிநாட்டில் பதிவான ஒரே ஒரு சம்பவமே ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் தொற்றிய சம்பவமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

“பலவற்றிலும் ஒரு சம்பவம் மாத்திரமே பதிவாகி உள்ளது. சீனாவுக்கு வெளியில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றிய மேலும் சம்பவங்களை நாம் இதுவரை காணவில்லை என்பது எமக்கு ஆறுதலாக உள்ளது” என்று உலக சுகாதார அமைப்பு ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் தொடர்ந்து அவதானித்து வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

எனினும் ஜெர்மனியில் பதிவாகி இருக்கும் முதல் கொரோனா வைரஸ் தொற்று அண்மையில் சீனாவில் இருந்து வந்த ஒருவரிடம் இருந்து தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது. இது ஐரோப்பிய மண்ணில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் தொற்றிய முதல் நிகழ்வாக உள்ளது.

கடந்த ஜனவரி 23 ஆம் திகதி ஷாங்காயில் இருந்து வந்த சீன பெண் ஊழியர் ஒருவர் சுகவீனம் உற்ற நிலையில் அவருடன் சந்திப்பொன்றில் பங்கேற்ற 33 வயது ஜெர்மன் நாட்டவர் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது மற்றவர்களுக்குப் பரப்புகின்றனர் என்பதைத் தெரிந்துகொள்வது, நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் முக்கியம் என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நோய் எவ்வாறு பரவுகிறது என்பதை அறிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி மேலும் தகவல் தேவை என்று நிறுவனம் கூறியது.

கொரோனா வைரஸால் உலக அளவில் ஆபத்து நேரும் வாய்ப்பு அதிகம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்குமுன் வெளியிடப்பட்ட அறிக்கைகளில், ஆபத்து மிதமானது என்று தவறாகக் குறிப்பிட்டதை நிறுவனம் ஒப்புக்கொண்டது.

உலகச் சுகாதார நிறுவனம் இதுவரை எவ்வித வர்த்தகத் தடைகளையோ, பயணத் தடைகளையோ விதிக்கவில்லை. ஆனால் அனைத்துக் குடிநுழைவு இடங்களிலும், நோய் அறிகுறிகள் உடையவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது.

சர்வதேச அளவில் நடவடிக்கை

அமெரிக்காவில் பலருக்கும் இந்த வைரஸ் தொற்றிருக்கும் நிலையில், சீனாவுக்கு பயணம் செய்வது குறித்து மீள்பரிசீலனை செய்யும்படியும் ஹுபெய் மாகாணத்திற்கு செல்வதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது. எதிர்வரும் நாட்களில் வுஹானில் இருந்து துருதரக பணியாளர்கள் மற்றும் அமெரிக்க பிரஜைகளை அழைத்துவருவதற்கு அந்த நாடு திட்டதிட்டுள்ளது.

மறுபுறம் மருத்துவ உதவியாளர்களுடன் நாளை சீனாவுக்கு பிரத்தியேக விமானம் ஒன்றை அனுப்பி சுமார் 200 தமது பிரஜைகளை அழைத்துவர ஜப்பான் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அழைத்து வரப்படுபவர்கள் புதிய வைரஸின் நோய் அறிகுறிகள் குறித்து இரண்டு வாரங்களுக்கு கண்காணிக்கப்படவுள்ளனர்.

அத்தியாவசியம் இன்றி சீனா செல்வதை தவிர்க்கும்படி மேலும் பல நாடுகளும் தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளன. ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்று தமது பிரஜைகளை அழைத்து வர பிரான்ஸும் வுஹான் நகருக்கு விமானத்தை அனுப்ப திட்டதிட்டுள்ளது.

சீன மக்களுக்கான ஒன் அரைவல் விசா நடைமுறையை நிறுத்துவதாக பிலிப்பைன்ஸ் நேற்று அறிவித்துள்ளது. மறுபுறம் சீனாவின் வுஹான் மற்றும் ஹுபெய் பகுதிகளில் இருந்து வரும் சீனக் குடிமக்கள் மலேசியாவில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனது பிரதான நிலத்திற்கான எல்லையை மூடும் திட்டத்தை ஹொங்கொங் அறிவித்துள்ளது.

சீனாவுக்கு வெளியில் கொரோனா வைரஸ் தொற்றிய 47 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. சீனாவுக்கு வெளியில் இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.

பங்குச் சந்தைகள் சரிவு

வுஹான் வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்த முதலீட்டாளர்களின் கவலையால் உலகெங்கும் பங்குச் சந்தைகளில் அதிகக் குழப்பம் நிலவுகிறது.

ஆசியப் பங்குச் சந்தைகள் பெரும்பாலும் நேற்று சரிவுடன் ஆரம்பித்தன. சிங்கப்பூரில் 5ஆவது வுஹான் வைரஸ் தொற்றுச் சம்பவம் பதிவாகியிருக்கும் நிலையில் எஸ்.டீ குறியீடு 2.5 வீதம் சரிந்தது.

சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப் பிந்திய ஆரம்ப வர்த்தகத்தில் எஸ்.டீ குறியீடு 82 புள்ளிகள் இழந்து 3,157 ஆகப் பதிவானது.

ஜப்பானில் நிக்கேய் குறியீடு, தென் கொரியாவின் கோப்சி குறியீடும் வீழ்ந்தது.

தென் கொரியாவில் கடந்த திங்கட்கிழமை 4ஆவது வைரஸ் தொற்றுச் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டது.

Wed, 01/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை