1,000 ரூபாவை விடவும் அதிக வருவாயை பெறும் வழிமுறைகள் ஆராய்வு

தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபா சம்பளத்தைவிட அதிகமான வருமானத்தை பெறும் வழிமுறைகள் தொடர்பில் ஆராயப்படுமென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை அரசாங்கம் கொண்டுவந்திருத்திருந்தது. இவ் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் சமூகநிலை மேம்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாகவே இருக்கின்றது. இந்த இலக்கை நோக்கி பயணிப்பதற்கு தோட்டக் கம்பனிகள் உட்பட அனைத்து தரப்புகளும் ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

1,000 ரூபா சம்பள உயர்வுக்கோரிக்கை நியாயமானதே என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை பட்டியலிட்டுக்காட்ட முடியும். இது சம்பந்தமாக கம்பனிகளுடனும் பேச்சு நடத்தப்பட்டது.

கம்பனிகளிடம் யோசனை திட்டம் கோரப்பட்டுள்ளது. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் என்ற அடிப்படையில் முழுமையான பங்களிப்பும் வழங்கப்படும். புதிய அரசாங்கத்தால் பொருளாதார நிவாரணப் பொதியொன்று வழங்கப்பட்டது. வற்வரி குறைப்பு, ஏனைய சில வரிகள் நீக்கம் எனப் பல விடயங்கள் அதில் உள்ளன.

உரம்கூட நிவாரண விலையில் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கம்பனிகளுக்கு பொருளாதார நெருக்கடி என்ற சிக்கல் வராது. சில தோட்டங்கள் சிறப்பாக இயங்குகின்றன. மேலும் சில தோட்டங்கள் முறையாக இயங்குவதில்லை. தேயிலை மீள் பயிரிடல்கூட ஒரு வீதத்துக்கும் குறைவாகவே இருக்கின்றது. இந்நிலைமை மாறவேண்டும். தொழிலாளர்களும் முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும்.1,000 ரூபாவை வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்புகளின் ஒத்துழைப்புடன் அந்த இலக்கை அடைய முடியும் என நம்புகின்றோம். 1,000 ரூபா மட்டுமல்ல அதற்கு அப்பால் வருமானம் ஈட்டும் வழிமுறைகள் பற்றியும் ஆராயவேண்டும். அந்த நிலைக்கு தொழிலாளர்களை அழைத்துச்செல்ல வேண்டும். வெளியார் உற்பத்தி தொடர்பில் பரீசிலிக்கப்பட்டுவருகின்றது.

 

Sat, 01/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை