1,000 ரூபா வழங்க முடியாவிடின் தோட்டங்களை அரசிடம் ஒப்படையுங்கள்

தனிநபர் பிரேரணையை சபையில் சமர்ப்பித்து அநுராதா எம்.பி ஆவேசம்

 

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வை வழங்கி நியாயத்தை நிறைவேற்ற முடியாவிடின் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு கம்பனிகளுக்கு பகிரங்கமாக கோரிக்கை விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுராதா ஜயரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் குறிப்பிடுகையில்,

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நியாயத்தை நிலை நிறுத்தவென 1,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்திருந்தார். தோட்டத் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இன்று தொழிலாளர்களாக அவர்கள் பெருந்தோட்டங்களில் பணிப்புரிய தயார்நிலையில் இல்லை.

நகர்புற தொழில்களை நோக்கி அவர்கள் நகர்ந்து வருகின்றனர். இளைஞர்கள் பெருந்தோட்டத்துறையில் பணிபுரிய தயார்நிலையில் இல்லை. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அதிகமாக உள்ளனர். பெருந்தோட்டத்துறை அந்நிய செலாவணி மற்றும் சுற்றுலாத்துறையில் பாரிய தாக்கத்தை செலுத்துகிறது.

‘சிலோன் டீ’ உலகளாவிய ரீதியில் பிரசித்தமானதுடன் எமது சுற்றுலாத்துறைக்கும் ஊக்கத்தை கொடுக்கிறது. இவர்களை இத் தொழில்துறையில் தக்கவைக்க கடந்த காலத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

துரிதமாக 1,000 ரூபா சம்பள உயர்வை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். தொழில் பிரச்சினையுடன் தற்கொலைகளும் அதிகம் இடம்பெற்று வருகின்றன. நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடையும் சந்தர்ப்பத்தில் இங்கு தற்கொலைகள் இடம்பெறுவது பாரிய பிரச்சினையாகும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 01/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை