1,00,000 வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் பெறுவதில் இளைஞர், யுவதிகள் முண்டியடிப்பு

குறைந்த கல்வித்தகமை கொண்டவர்களுக்கு (சாதாரணத்தரத்துக்கும் குறைவான) ஒரு இலட்சம் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்வதற்கு நாடுமுழுவதும் மக்கள் ஆர்வம்காட்டியிருந்தனர்.

இவ் விண்ணப்பப்படிவங்கள் நேற்று முதல் நாடு முழுவதுமுள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக விநியோகிக்கும் செயற்பாடு ஆரம்பமான நிலையில், ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்துக்கொண்டு விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொண்டனர்.

வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களிலும் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்வதில் இளைஞர்கள் ஆர்வமாக இருந்ததுடன், பல இடங்களில் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்வதில் சலசலப்புகளும் ஏற்பட்டன.விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் அதிகளவானோர் திரண்டிருந்தமையால் சில சலசலப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறிது அமைதியின்மை ஏற்பட்டதுடன் பின்னர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் வருகையைத் தொடர்ந்து சுமுக நிலையை ஏற்பட்டது.

இந்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பப்படிவங்களை சீராக வழங்குவதற்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் செயலக உத்தியோகத்தர்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அறிவித்துள்ளனர். ஏறத்தாழ 1,500இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் இங்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, யாழ்.மாவட்டத்திலும் விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக்கொள்ள அதிகளவான இளைஞர்கள் யாழ்.மாவட்டத்திற்கு உட்பட பிரதேச செயலங்களுக்கு வருகைத்தந்ததாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.

நுவரெலியா, அங்குராங்கெத்த, வலப்பனை, கொத்மலை, அம்பகமுவ உள்ளிட்ட பிரதேச செயலகங்களிலும் ஆயிரக்கணக்கான விண்ணப்பப்படிவங்கள் மாத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிந்தது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Sat, 01/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை