100 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்து கோரம்

12 பேர் பலி பசறையில் சம்பவம்

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் 6ம் கட்டை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 40ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று மாலை 05 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பசறை பகுதியிலிருந்து எக்கிராவ பகுதிக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற இ.போ.ச. பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த பஸ் தினமும் மாலை பசறையிலிருந்து எக்கிராவ வரை பயணிப்பதோடு நேற்றும் குறித்த நேரத்தில் பயணத்தை ஆரம்பித்துள்ளது. 6 ஆம் கட்டை பகுதியில் வைத்து லொறியொன்றுக்கு வழிவிடுவதற்காக ஓரமாக்கிய போது பஸ் பாதையைவிட்டு விலகி பள்ளத்தில் விழுந்துள்ளது.

பஸ் தலைகீழாக விழுந்து கிடந்த நிலையில் பஸ்ஸிற்கு கீழேயும் பலர் சிக்கியிருந்ததாக அறிய வருகிறது.

நூற்றுக்கணக்கான பொதுமக்களும் பொலிஸாரும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டதோடு சம்பவ இடத்தில் 7 பேர் உயிரிழந்ததோடு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அறிய வருகிறது.

விபத்தில் பஸ் சாரதி உட்பட 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் பசறை அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 20ற்கும் மேற்பட்டோர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹற்றன் சுழற்சி, ஹாலி -எல தினகரன் நிருபர்கள் 

 

Tue, 01/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை