நீதித்துறைக்கு அவப்பெயர்;10 குழுக்கள் விசாரணை

பிரதம நீதியரசர் நடவடிக்கை எடுப்பாரென நம்புகிறோம்

ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளில் நீதிமன்றம் தொடர்பில் வெளியாகியுள்ள விடயங்கள் குறித்து பிரதம நீதியரசர் நடவடிக்கை எடுப்பாரென நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ​தெரிவித்தார்.

இந்தக் குரல் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே முரண்பாடு ஏற்படாதிருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்​னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப்பிரிவு பிரதானிகளை சந்தித்தார்.

இதன்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

குரல் பதிவு தொடர்பில் 10 குழுக்களினூடாக விசாரணைகள்முன்னெடுக்கப்படுகின்றன.விசாரணைகளின் முடிவுகளுக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குரல் பதிவு விவகாரத்தை ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொடர்புள்ள சம்பவமாக மாத்திரம் மட்டுப்படுத்தாது இதனுடன் தொடர்புள்ள ஏனைய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.ஜனாதிபதி ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நீதிபதிகளுடன் உரையாடி குறித்த நபருக்கு தூக்குத் தண்டனை வழங்குமாறு கூறுபவர் மட்டுமன்றி அந்தத் தண்டனை விதித்தவும் தவறு செய்துள்ளார். நீதிமன்ற செயற்பாடுகளில் தலையீடு இடம்பெற்றிருப்பது இதனூடாக தெளிவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தலையிட்டிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்.இது பாரதூரமான விடயம் என்றார்.

விசாரணை மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.நீதிபதிகள் எத்தனை பேர் பட்டியலில் உள்ளனர் என்று தெரியாது. ஒரு இலட்சத்திற்கு அதிகமான குரல்பதிவுகள் உள்ளன. பொலிஸ் குழு விசாரணை நடத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த பிரதமர்,உச்சநீதிமன்ற நீதிபதிகள் எத்தனை பேர் இவ்வாறு பேசியுள்ளனர் என என்னிடம் கேட்கின்றனர். இந்த சந்தேகம் முழு நாட்டிற்கும் இருக்கிறது. பிரதம நீதியரசர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.வீட்டிற்கு சென்று நீதிபதி ஒருவருடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. நீதித்துறை மீதான கௌரவம் நம்பிக்கை என்பவற்றை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, களுத்துறை தர்மவிஜயபிரிவேனவில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

கீழ்த்தரமான அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் முழு அரசியலுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக வும் கடந்த ஆட்சியில் இருந்த சிலரது செயற்பாடுகள் காரணமாக நீதிமன்றம் குறித்த மக்களின் நம்பிக்கையும் நீதித்துறை சுயாதீனம் பற்றிய நம்பிக்கையும் வீழ்ச்சி யடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். பேஸ் புக்கை பார்த்து இது தொடர்பில் அறிந்துகொள்ளலாம்.தகுதியில்லாதவர்களை அரசியலில் ஈடுபடுத்துவதால் முழு அரசியலுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.கடந்த ஆட்சியில் மேல்மட்டம் முதல் கீழ் மட்டம் வரையுள்ள சகலரும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதாகக் கூறி தீர்ப்புகளை மாற்றுவது கடந்த அரசின் கொள்கையாக இருந்தது. சிலரின் செயற்பாட்டினால் நீதிமன்றம் குறித்த நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

இழந்த கௌரவத்தை மீளக் கட்டியெழுப்புவது பிரதம நீதியரசரின் பொறுப்பாகும்.இது தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுப்பதனூடாக நீதித்துறை மீதான நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். நாட்டில் காட்டுச் சட்டம் செயற்படுத்தப்பட்டிருந்தால் நாளாந்தம் நாடு அழிவுப்பாதையிலேயே செல்லும்.

குரல்பதிவுகள் வெளியான பின்னரே இவ்வாறு நடந்திருப்பது வெளியில் தெரியவந்துள்ளது.

ஏதாவது தேவைக்கு நீதிபதியை நாம் சந்திப்பதானால் சட்டத்தரணியுடனே செல்ல வேண்டும்.அது தான் சம்பிரதாயமாகும்.

தனியாகச் சென்று நீதிபதியை சந்திக்க முடியாது. இவ்வாறு சில தீர்ப்புகளுக்காக நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுத்ததால்தான் எனது மகன் 46 நாட்கள் விளக்கமறியலில் இருந்ததுடன்,சில எம்.பிக்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.இந்த நிலைமை மாற வேண்டும். நாம் ஒரு போதும் நீதிமன்றத்திற்கு அழுத்தம் மேற்கொள்ளவில்லை. அதன் பாரதூரத்தை நாம் அறிந்திருந்தோம் என்றும் அவர் கூறினார்.

Tue, 01/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை