நீண்டகாலம் சிறையிலுள்ள கைதிகளை விடுவிக்க விசேட திட்டம்

நீண்டகாலம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறந்த ஒழுக்கத்துடன் செயற்பட்ட கைதிகளைப் புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக நீதி,மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறந்த ஒழுக்கத்துடன் சிறைகளில் இருந்த கைதிகளை சமூகத்துடன் மீளிணைப்பது தொடர்பில் சட்ட மாஅதிபர் அடங்கலாக நீதித்துறையுடன் பேசி உகந்த திட்டமொன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதாள உலகத்துடன் தொடர்புள்ள மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், பாலியல் துஷ்பிரயோகம் கொலை போன்ற பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட மாட்டார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  சிறைச்சாலைகளுக்குள் கைதிகளுக்கு இடப்பற்றாக்குறை காணப்படுகிறது.

மூன்று மடங்கு கூடுதலாக கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடத்தில் போதைப்பொருளுடன் தொடர்புள்ள வழக்குகளின் தொகை 150 மடங்கினால் உயர்ந்துள்ளது. அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் இருந்து கிடைக்கும் அறிக்கைகள் தாமதடைவதே வழக்குகளின் தாமத்திற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளுடன் கடந்த வாரம் பேச்சு நடத்தியதில் தாமதமின்றி அறிக்கைகளை வழங்கும் முறை குறித்து ஆராயப்பட்டது. கைதிகளை சமூகத்துடன் மீள் ஒருங்கிணைப்பது தொடர்பில் விசேட திட்டமொன்றை சிறைச்சாலை திணைக்களம் முன்னெடுக்க வேண்டும். சிறைகளுக்குள் இருந்து குற்றச்செயல்களுக்கு தூண்டும் கைதிகள் குறித்து விசேட கவனம் செலுத்துவதற்காக சீசீரீவி கெமரா தொகுதிகளை சகல சிறைச்சாலைகளிலும் அமைக்க இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை