சம்பிக்கவின் கைது ஜனநாயக சம்பிரதாயத்தை மீறிய செயற்பாடாகும்

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கைது ஜனநாயக சம்பிரதாயங்களை மீறியதொன்றாகும். பாராளுமன்ற உறுப்பினரொருவரை கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய சம்பிரதாயம் இதன் போது மீறப்படுள்ளது என ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் அதன் தலைவர் என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்க நேற்று விடுத்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் கூறியுள்ளதாவது, சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டிருப்பது முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாகவே ஆகும். அவ்வாறு அவர் கைது செய்யப்படுவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. பொலிஸார் இந்த விடயத்தில் விதிமுறைகளை மீறியே செயற்பட்டுள்ளனர். கடந்த ஆட்சிக் காலத்தில் நாம் நீதிமன்றம் பொலிஸ், அரச வேலை என்பனவற்றை அரசியல் மயமாவதிலிருந்து விடுவித்துள்ளோம். நீதித்துறை பொலிஸ் செயற்பாடுகள் அரச சேவைகள் சுயாதீனமாக செயற்பட வாய்ப்பை பெற்றுக் கொடுத்தோம்.

ஆனால் ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட நாடொன்றை கட்டியெழுப்ப உறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த அரசாங்கத்தின் கீழ் இடம்பெறும் சம்பவங்களை பார்க்கின்ற போது அதன் பின்னணியில் அரசியல் நோக்கமே காணப்படுகின்றது. சட்டம், ஒழுங்கு, சம்பிரதாயம் அனைத்தும் மீறப்படுவதையே பார்க்கக் கூடியதாகவுள்ளது.

இந்த தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி அதன் கடும் கண்டனத்தையும், கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றது.

எம்.ஏ.எம். நிலாம்

Sat, 12/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை