நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி புதிய கல்வித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளார்

காரைதீவில் புலமையாளர் கௌரவிப்பில் - அமைச்சர் சிறியாணி விஜேவிக்கிரம

இன்று நான் ஒரு வழக்கறிஞராக, பாராளுமன்ற உறுப்பினராக, மாவட்ட ஒருங்ணைப்புக்குழுத் தலைவியாக இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நான் கற்ற கல்விதான் என்பதை ஆணித்தரமாகக் கூறுவேன்.

இவ்வாறு காரைதீவு பிரதேசசபை நடாத்திய புலமையாளர் கௌரவிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சிறியாணி விஜேவிக்கிரம தெரிவித்தார். இந் நிகழ்வு காரைதீவு விபுலாநந்தர் கலாசார மண்டபத்தில் பிரதேச சபை செயலாளர் அ.சுந்தரகுமார் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

முதன்மை அதிதியாக காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்து சிறப்பித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்:

நானும் சிறுவயதில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதேபோல் இங்கு வந்துள்ள எனதுமகளும் கடந்த 2015இல் சித்திபெற்றபோது அவளை விட எனக்குச் சந்தோசமாகவிருந்தது.

அதேபோன்று இங்குவந்துள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இந்தமேடையில் பாராட்டப்படும்போது எவ்வளவு சந்தோசமடைவீர்கள் என்பதை நானறிவேன்.

கல்விதான் எமக்கு முக்கியம். நல்லதொரு நாட்டைக்கட்டியெழுப்ப கல்விதான் அடிப்படை. அதற்காகவே எமது ஜனாதிபதி புதிய கல்வித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளார்.

மாணவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து காப்பாற்றவேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.

காரைதீவு பிரதேச சபைத்தவிசாளர் கி. ஜெயசிறில் உரையாற்றுகையில்: எமது நாட்டு தேசியகீதம் தமிழிலும் பாடப்பட வேண்டும் என்பதில் மறுகருத்து இருக்க முடியாது. நாம் அதற்காக எதையும் செய்வோம்.

காரைதீவை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மாவட்ட அபிவிருத்திக்குப் பொறுப்பாக இருக்கும் தலைவி சிறியாணியை இங்கு பிரதம அதிதியாக அழைத்துள்ளோம் என்றார்.

சிறப்பு அதிதிகளாக உபதவிசாளர் எ.எம்.ஜாகீர், உறுப்பினர்களான மு.காண்டீபன், மு.ஜலீல், இ.மோகன் எம்.பஸ்மீர் ஆ.பூபாலரெத்தினம், எம்.றனீஸ் மற்றும் சு.கட்சி காரைதீவு அமைப்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி ஆகியோரும் அபிவிருத்திக்குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

(காரைதீவு குறூப் நிருபர்)

Mon, 12/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை