ஐ.தே.க பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று

எதிர்க்கட்சித் தலைவர்  சர்ச்சைக்கு இறுதி முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (02)கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது. இன்றைய சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இறுதி தீர்மானமொன்று எடுக்கப்படுமென கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர் யாரென்பது தொடர்பில் ஐ.தே.கவுக்குள் கடும் சர்ச்சைகள் எழுந்ததைபோன்று ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் யாரென தொடர்ந்து கருத்து முரண்பாடுகள் நிலவி வருகின்றன. கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டுமென

 

கட்சியின் ஒரு தொகுதியினரும் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டுமென இன்னுமொரு தொகுதியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

40 பேரின் கையொப்பத்துடன், ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் சபாநாயகர் கருஜயசூரிவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

என்றாலும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சஜித் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் 57 பேரின் கையொப்பத்துடன், சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்தனர்.

ஆனால், கட்சியின் பொதுச் செயலாளரின் தீர்மானத்துக்கு அமையவே தம்மால் செயற்பட முடியுமென சபாநாயகர் அறிவித்ததுடன், ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க முடியுமென தமது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றையும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்தவாரம் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க இணக்கம் காணப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.

ஐ.தே.முவின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின் பின்னர் சஜித் பிரேமதாச மற்றும் சபாநாயகர் கருஜயசூரியவுடன் கலந்துரையாடி இறுதி முடிவொன்றை எடுக்க ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க முடிவொன்றை எடுக்க முற்பட்ட போதிலும், சஜித் பிரேமதாச குறித்த சந்திப்புகளில் கலந்துகொள்ளவில்லை.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 12/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை