ராஜிதவை சிறைக்கு மாற்றுவது இறுதி நேரம் இரத்து

இன்று நீதிமன்றில் ஆஜர்

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை சிறைச்சாலைக்கு மாற்றும் நடவடிக்கை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு திடீரென ஏற்பட்ட 'நெஞ்சு வலி' காரணமாக அவர் தொடர்ந்து தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து வந்த அம்பியூலன்ஸ் வண்டி வெறுமையாக திரும்பிச் சென்றதாக அறியவருகின்றது.

வெள்ளை வான் கடத்தல் தொடர்பாக முன்னாள் அமைச்சர்  ராஜித சேனாரத்ன நடத்திய ஊடக மாநாடு தொடர்பில் அவர் கடந்த வாரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

இதயத் துடிப்பு தொடர்பில் பரிசோதனை நடத்திய பின்னர் அவரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவரை அழைத்துச் செல்ல பிற்பகல் 1.30 மணியளவில் அம்பியூலன்ஸ் வண்டி ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தது.

அவருக்கு சிகிச்சை அளிக்கும் டொக்டர் முபாரக் கையொப்பம் வழங்கும் வரை சிறைச்சாலை அதிகாரிகள் பல மணிநேரம் காத்திருந்தார்கள்.

இந்த நிலையில் அவரின் மருத்துவர், டொக்டர் ராஜிதவை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கிய நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வது இடைநிறுத்தப்பட்டது.

அவருக்கு ஏற்பட்ட நோய் காரணமாக அவரின் உயிருக்கு ஆபத்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் அழைத்துச் செல்லப்படவில்லை என்றும் சிறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். (பா)

Mon, 12/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை