எந்தவொரு சர்வதேச நாட்டுக்கும் அடிபணியப் போவதில்லை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் சிறந்த ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெற்றாலும் எந்தவொரு சர்வதேச நாட்டுக்கும் அரசாங்கம் அடிபணியப் போவதில்லையென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கடந்த கால அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்கு அடிப்பணிந்து செயற்பட்டதுடன், சர்வதேச சக்திகளிடம் மண்டியிட்டும் கிடந்தது என்றும் அவர் கூறியுள்ளார். வெலிமட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், நாம் வெற்றி பெற்றமை மாத்திரமல்ல இந்த தேர்தல் வெற்றியானது முழு நாட்டையும் வெற்றிகொள்ள வைத்துள்ளது.

அதல பாதாளத்துக்குச் செல்லவிருந்த நாட்டைக் காப்பாற்றியுள்ளமை மாத்திரமல்ல பாதுகாப்பற்றிருந்த நாட்டை பாதுகாப்பானதாக மாற்றியுள்ளோம். அத்துடன் பௌத்த சாசனத்தை பாதுகாக்கும் நாடாகவும் மாற்றியுள்ளோம்.

இந்த அனைத்தையும் மக்கள்தான் ஏற்படுத்தியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைந்திருந்தால் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும்?. ஜனாதிபதி அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கு முன்னுதாரணமாகவுள்ளார். அரச வளங்களை அவர் பயன்படுத்தவில்லை. மங்கிப்போயிருந்த நாட்டின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கியுள்ளார். தேசிய பொருளாதாரம் பலமடைய வேண்டும். இறக்குமதிகளை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலான பொருளாதார கொள்கைகளை நாம் அமுல்படுத்தி வருகின்றோம். இதன்மூலம் தேசிய பொருளாதாரம்

 

வலுவடையும். இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் சிறந்த ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறுகின்றன. என்றாலும், நாம் சர்வதேசத்துக்கு அடிபணிந்து செயற்படமாட்டோம். சர்வதேச சக்திகளுக்கும் பன்னாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் கோட்டாபயவின் அரசாங்கம் ஒருபோதும் அடி பணியாது என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை