கூட்டமைப்பின் தலைவர் தான் நினைத்தபடி செய்ய முடியாது

தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்களை நினைத்திருந்தால், புலிகள் இயக்கத்தை தோற்கடித்தது நல்லதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்க முடியாது. இன்று தலைவராக மிளிர்வதற்கு புலிகள் இயக்கம் தான் காரணம் என்பதையும் மறக்காது அவர் கருத்துக்களை வெளியிட வேண்டும். இவ்வாறு தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கருத்து இவ்வாறான ஒரு நிகழ்வில் கூறப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்ல விடயமாக இருக்கலாம். சர்வதேசம் குறிப்பாக இந்தியா, இலங்கை அரசு தொடர்பில் வெளியிட்ட உறுதிமொழி தொடர்பில் என்ன செய்ய வேண்டும் என்பது சம்பந்தமாக பிரஸ்தாபித்துள்ளார்.

சம்பந்தன் சாதாரண அரசியல்வாதியல்ல. ஒரு கட்சியின் தலைவராக 10 வருடங்களாக இருந்து வருகின்ற ஒருவர். எந்த த.தே. கூட்டமைப்பு 2004 ஆம் ஆண்டு 22 ஆசனங்களைப் பிடிப்பதற்கு, புலிகள் இயக்கம் சகல வழிகளிலும், உதவி நின்றார்களோ, தேர்தல் பிரசாரத்தில் பங்கெடுத்து, மக்கள் அமோக வாக்களிப்பதற்கு உதவியும் ஒத்தாசையும் செய்தார்களோ, அந்த இயக்கத்தைப் பற்றித்தான் சம்பந்தன் பேசியிருக்கின்றார்.

யாரைத் திருப்திப்படுத்த சம்பந்தன் இவ்வாறான கருத்தை தெரிவித்தார்? புலிகள் இயக்கம் இலங்கை அரசுடன், இலங்கையை இரண்டாக பிரிப்பதற்காக பேச்சுவார்த்தையை நடத்தவில்லை.

எனவே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தான் நினைத்தபடி செய்ய முடியாது என்றார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை