தேர்தலில் கல்முனைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் உத்தரவு

ஜனாதிபதித் தேர்தலின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கல்முனை தொகுதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்குரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக, கல்முனைத் தொகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் பிரதேசத்திற்கான தேர்தல் நடவடிக்கைக் குழு இணைப்பாளர்களில் ஒருவருமான கலாநிதி பஸீர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

கல்முனைத் தொகுதியின் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்

கல்முனைத் தொகுதியின் எதிர்கால அரசியல் இருப்புக்கள் தொடர்பில் மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.அதாஉல்லாவுடன் இணைந்த வகையிலே சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் கல்முனைத் தொகுதிக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளன. இதனைப் புரிந்து கொண்டு முஸ்லிம் மக்கள் எம்மோடு பயணிக்க வேண்டிய காலமும் சூழலும் கனிந்து வருகிறது

கடந்த ஆட்சிக் காலத்தில் இழுபறிக்குள்ளான பல்வேறு விடயங்களையும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவேற்றுவதற்கான விரைவான வேலைத்திட்டம் ஒன்றை ஜனாதிபதி தலைமையிலான எமது குழுவினர் முன்னெடுக்கவுள்ளனர்.

சாய்ந்தமருதுக்கான நகர சபை, சாய்ந்தமருதுக்கான சிறிய மீனவர் துறைமுகம், கல்முனை நகர வரிவாக்கல் அபிவிருத்தி, மருதமுனையில் நெசவுத் தொழிலுக்கான தொழில் பேட்டை, எஞ்சியுள்ள சுனாமி வீட்டுத் திட்ட வீடுகளைக் கையளித்தல், மருதமுனை கடற்கரை வீதி புனரமைப்பு, மருதமுனை மீனவர்களுக்கான தொழிலகம், கல்முனை நான்காகப் பிரிக்கப்படும் போது மருதமுனைக்கான தனியான பிரதேச சபை, மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக மாற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த வாரம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அமைச்சர் அதாஉல்லாவும் சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகிய நாமும் கலந்து கொண்டபோது இவ்விடயங்களில் தாம் அக்கறையோடு இருப்பதாகவும் அதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு தாம் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவிடம் தெரிவித்தார்.கல்முனை மாநகர சபையை ஒழுங்குபடுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.எந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்தாலும் மற்ற இனத்திற்குப் பாதிப்பு ஏற்படாமால் நடந்து கொள்வதே நியாயமானது. கல்முனை நகரம் தமிழ்-முஸ்லிம் உறவுக்குப் பெயர் போனது. அதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே எமது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.

(பெரியநீலாவணை தினகரன் நிருபர்)

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை