சீரற்ற காலநிலை: இலங்கை - பாக். முதல் டெஸ்ட் சமநிலையில் முடிவு

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான நேற்று இலங்கை சார்பில் தனஞ்சய டி சில்வா சதம் பெற்றதோடு பாகிஸ்தான் அணிக்காக ஆபித் அலி மற்றும் பாபர் அசாம் சதம் குவித்தனர். இதன்போது தனது கன்னி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சதம் பெற்ற முதல் வீரராக ஆபித் அலி புதிய சாதனை படைத்தார்.

கடந்த புதன்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டி சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டதால் ஐந்து நாட்களும் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை ஆட வேண்டி ஏற்பட்டது.

முதல் நாளில் 68 ஓவர்கள் வீசப்பட்டபோதும் அடுத்த இரண்டு நாட்களிலும் 23 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில் நான்காவது நாள் ஆட்ட ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இதனால் கடைசி நாளான நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணிக்காக 87 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தை தொடர்ந்த தனஞ்சய டி சில்வா டெஸ்ட் போட்டிகளில் தனது 5ஆவது சதத்தை பெற்றார். 166 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணி 97 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 308 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தானின் ஆரம்ப வீரர் ஷான் மசூத்தை ஓட்டம் இன்றியே கசுன் ராஜித்த ஆட்டமிழக்கச் செய்தார். அணித்தலைவர் அசார் அணி 36 ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆபித் அலி மற்றும் பாபர் அசாம் பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 162 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். பாபர் அஸாம் ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களை பெற்றதோடு ஆபித் அலி ஆட்டமிழக்காது 109 ஓட்டங்களை குவித்தார். ஆபித் அலியின் கன்னி டெஸ்ட் போட்டியாக இது இருந்தது. அவர் கடந்த மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தனது கன்னி ஒருநாள் போட்டியில் 112 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

ஐந்தாவது நாள் ஆட்டநேர முடிவின்போது முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை கராச்சியில் ஆரம்பமாகவுள்ளது.

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை