சர்வதேச அரங்கில் அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் முயற்சி

அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் சந்திப்பு

சர்வதேச அரங்கில் அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சுவிற்சர்லாந்து தூதரகத்துக்குத் தெரியாமலேயே எடுக்கப்பட்ட முயற்சிதான் சுவிஸ் தூதரக ஊழியர் விவகாரம். இச்சம்பவம் தொடர்பான விசாரணையின் போது சம்பந்தப்பட்ட ஊழியர் எந்தவொரு உறுதியான ஆதாரங்களும் இன்றி ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்களை கூறியிருப்பதில் இருந்தே இது தெளிவாக தெரியவந்திருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர் ரமேஷ் பத்திரன கூறுகிறார்.

"சர்வதேச விடயங்களைப் பொறுத்தவரை நூறு சதவீதம் நடுநிலை வகிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே சர்வதேச விவகாரங்களில் இலங்கை எந்தவொரு தரப்பையும் சாராது செயற்படும். இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு. நாம் அனைவருடனும் நட்பாக இருக்கவே விரும்புகிறோம். எவருடனும் நாம் பகைமை பாராட்ட மாட்டோம்" என்று அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் கூறுகிறார்.

ரமேஷ் பத்திரன எமக்கு பேட்டியொன்றை வழங்கினார்.

கேள்வி: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்த அரசியல் பின்னணி நாட்டில் உருவான விதம் பற்றி விளக்க முடியுமா?

பதில்: 2015 இல் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்ததும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் பொருளாதார மற்றும் அபிவிருத்தி, சமூகம் தொடர்பாகவும் ஆரோக்கியம் மற்றும் கல்வி தொடர்பாகவும் மக்களுக்கு பயன்களை பெற்றுத் தர வேண்டும் என்ற கொள்கை நல்லாட்சி அரசாங்கத்திடம் இருக்கவில்லை. மாறாக அரசியல் எதிராளிகளையும் அரசாங்க அதிகாரிகளையும் பழிவாங்குவதையே நல்லாட்சி அரசாங்கம் கொள்கையாக வைத்துக் கொண்டது. இதனால் மெல்ல மெல்ல பொருளாதார நிலை மோசமடைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் முதலீடுகள் செய்வதை குறைத்துக் கொண்டனர். ஒருபுறத்தில் பொருளாதார சரிவு, மறுபுறம் ஜனாதிபதியும் பிரதமரும் இரு வெவ்வேறு திசைகளில் செயற்பட்டனர். இதனால் மக்களுக்கு அரச நிர்வாகத்தில் மாற்றமொன்று தேவைப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையை முன்னைய நல்லாட்சி அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுத்தது.

கேள்வி: புதிய அரசாங்கம் எதிர்நோக்கும் சவால்கள் எவை?

பதில்: நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற தேவை மக்களுக்கு இருந்தது. அதற்காகத்தான் மக்கள் பெருமளவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தனர். இரண்டாவதாக மக்களுக்கு பொருளாதார மீட்சி தேவைப்பட்டது. வீழ்ச்சியடைந்து கொண்டு வந்த பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்க வேண்டியிருந்தது. அது மட்டுமன்றி சுகாதாரம், கல்வி ஆகியவற்றிலும் மக்களுக்கு முன்னேற்றம் தேவைப்படுகிறது. இந்த சவால்களைத்தான் புதிய அரசாங்கம் எதிர்நோக்குகிறது.

கேள்வி: மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

பதில்: மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்று முழுமையாக இலங்கையில் உள்ள எவருக்கும் தெரியாது. இதுவரை தெரிந்தவை நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்றுதான் கூறப்படுகிறது. மிலேனியம சவால் ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க் கட்சியாக இருந்த போது நாம் பலவாறாக பேசினோம். பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் அந்த ஒப்பந்தம் எப்படிப்பட்டது என்பதை நாம் மக்களுக்குக் காட்ட வேண்டும். அதற்குப் பிறகுதான் அதனை நிராகரிக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஒப்பந்தம் எத்தகையது என்பது மக்களுக்குத் தெரியவரும். இப்போதைக்கு மிலேனியம் சவால் ஒப்பந்தம் பற்றி நாம் எந்தவொரு தீர்மானத்தையும் இன்னும் எடுக்கவில்லை.

கேள்வி: சுவிஸ் தூதரக சம்பவம் தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

பதில்: சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு தொந்தரவு தரப்பட்டதாக தூதரகத்தின் முறைப்பாடொன்று உள்ளது. அவரை ஒரு சிலர் கடத்திச் சென்று தூதரகத்தின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை பெற முனைந்ததாகவும், அவருக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. அது தொடர்பான விசாரணையின் போது சம்பந்தப்பட்ட ஊழியர் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்தார். சுவிஸ் தூதரகத்துக்கு தெரியாதவாறு அரசாங்கத்தை அபகீர்த்திக்குள்ளாக்கும் ஒரு நடவடிக்கை இது என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது.

கேள்வி: அரசியல் விவகாரங்களுக்கு அப்பால் வடக்கு மற்றும் கிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கிய இடம் தரப்பட வேண்டும் என்பதில் இணங்குகிறீர்களா?

பதில்: எமது முன்னைய ஆட்சிக் காலத்தில் 2010 முதல் 2015 வரை வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் சமூக நலன் தொடர்பாக மிகுந்த அக்கறை எடுத்திருந்தோம். வடக்கு ரயில் பாதை யாழ்ப்பாணம் வரை மீளத்திருத்தப்பட்டது. வடக்குக்கு நூறு சதவீத மின்சாரம் வழங்கப்பட்டது. பாடசாலைகள் இயங்கத் தொடங்கின. வைத்தியசாலைகள் செயற்பட்டன.

இவை அனைத்தும் 2015 ஜனாதிபதித் தேர்தலுடன் நிறுத்தப்பட்டன. அந்த செயற்பாடுகளை நாம் மீண்டும் தொடர்வோம். நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பிரதேசங்களில் உள்ள மக்கள் அனுபவிக்கும் அதே பயன்களை, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களும் அனுபவிக்க வேண்டும் என்பதை நாம் உறுதிப்படுத்துவோம்.

கேள்வி: 19 ஆம் திருத்தச் சட்டத்தை திருத்த வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறதா? அல்லது அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று விரும்புகிறதா?

பதில்: 19 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பான கொள்கைத் தீர்மானத்தை நாங்கள் இன்னும் எடுக்கவில்லை. எனினும் கடந்த 5 வருடங்களாக அது பற்றிப் பேசி வருகிறேம். 2015 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. இதனால் இரண்டு அதிகார மையங்கள் உருவாகின. ஜனாதிபதியும் பிரதமரும் இரு வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். கொள்கையளவில் இது குழப்ப நிலையை ஏற்படுத்தியது. கடந்த நான்கரை வருடங்கள் இப்படித்தான் கழிந்தது. எனவே 19 ஆம் திருத்தச் சட்டம் பற்றி நாம் மீண்டும் யோசிக்க வேண்டியுள்ளது. அதில் நல்லது இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். நாட்டுக்கு நல்ல அரசியலமைப்பொன்றை உருவாக்குவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

கேள்வி: இலங்கை மின்சார சபை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்ற ஊழல் மற்றும் சீரற்ற நிர்வாகம் காரணமாக அவை நிதிச் சிக்கல்களில் உள்ளன. அவற்றை மீண்டும் இலாபகரமான நிறுவனங்களாக மாற்றுவதற்கு உங்களிடம் யோசனைகள் உள்ளனவா?

பதில்: இது தொடர்பான ஒரு ஆரம்ப கட்ட நடவடிக்கையாக அரசாங்க திணைக்களங்கள், சபைகளின் தலைவர்கள் மற்றும் அரசியல் நியமனம் பெற்ற அதிகாரிகள் இதுவரை பெற்று வந்த உயர் சம்பளம் மற்றும் சலுகைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இப்போது குறைத்திருக்கிறார். அதேநேரம் தனது பணியாட்கள், வாகனங்கள் மற்றும் அரச செலவுகளை குறைத்து அவர் ஒரு முன்னுதாரணமாக தன்னை காண்பித்திருக்கிறார். இவரது இத்தகைய உதாரணங்களை நாமும் பின்பற்ற வேண்டும். இது நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும். அரச நிறுவனங்கள் அதன் செலவுகளைக் குறைத்து உரிய வகையில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

கேள்வி: பல்கலைக்கழக அனுமதிக்கான Z ஸ்கோர் முறையானது மாற்றப்படுகிறதா?

பதில்: Z ஸ்கோர் முறைக்குப் பதிலாக, பாடசாலைகளே ஒரு முறையைப் பின்பற்ற வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். இப்போது எமக்கு இருப்பது மாவட்டத்தை மையப்படுத்தும் ஒருமுறை. இந்த முறையை பயன்படுத்தும் போது ஒரு பிரதேசத்துக்குள்ளேயே வசதிகள், உபகரணங்கள் ஆசிரியர்கள் என்ற வகையில் பல மாற்றங்களைக் காண்கிறோம். எனவே மாவட்டம் முழுவதும் ஒரே Z ஸ்கோர் முறை பயன்படுத்தப்படுவது முறையல்ல.

எனவே நாம் கிடைக்கும் வசதிகளுக்கு ஏற்ப பாடசாலைகளை தரப்படுத்தவுள்ளோம். எனவே பாடசாலைகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்றவாறே ஸ்கோர்முறை அமையும்.

-

உதித்த குமாரசிங்க...

Tue, 12/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை