காணி சுவீகரிப்பு;

பொது மக்களுக்கு அரசு 25 பில்லியன் ரூபா கடன்

2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கடந்த ஆட்சி காலத்தில் வீதி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்காக எவ்வித கொடுப்பணவுகளும் வழங்கப்படவில்லை. சுமார் 25 பில்லியன் ரூபா வரை மக்களுக்கு செலுத்த வேண்டியுள்ளது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து தெரிவித்தார்.

இல்லை, முடியாது என்று கூறாது அனைவரதும் நம்பிக்கையை வென்று, நாட்டிற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருந்தொகையான வாக்குகளை அளித்த மக்களின் நலன் பேணும் வகையில் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

குருநாகல் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி பணிகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவும் என்மீது கொண்ட நம்பிக்கையினாலே இப் பதவியை வழங்கியுள்ளார்கள். இந் நம்பிக்கைக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்பட மாட்டோம். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதுடன் , எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் நாட்டிலுள்ள வீதிகள் மற்றும் துறைமுகங்களை அபிவிருத்திச் செய்வோம். இந்த அமைச்சை முழுமையாக அழித்துவிட்டார்கள். அதுவே உண்மை நிலை. புதிதாக நியமிக்கப்பட்டவுடன் ஒரு நிலைக்கு வருவதற்கு ஒரு மாத காலமேனும் செல்லும். அதிகாரிகளும் அதனை நன்கு அறிவார்கள். 2015 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரையில் 25 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. அது இன்னும் செலுத்தப்படவில்லை.

காணிகளை கையப்படுத்தி அதற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளவில்லை. ஒரு சிலர் மரணித்தும் விட்டார்கள், ஒரு சிலரின் ஆவணங்கள் தொலைந்தும் போய்யுள்ளன. கடந்த நான்கரை ஆண்டுகளும் மனசாட்சியற்றவர்கள் ஆட்சிபுரிந்துள்ளார்கள்.

அதுவே கசப்பான உண்மை. கடந்த மூன்று வாரங்களில் நான் கண்ணுற்ற செயல்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். பத்து இலட்சம் ரூபா வீதம் 25 பேருக்கு செலுத்தவேண்டியுள்ளது. இது இலகுவான செயற்பாடல்ல.

இவ்வாறான ஓர் நிலையிலே நான் உங்களுக்கான பணத்தை ஒதுக்கியுள்ளேன். இல்லையென கூறாது வாக்களித்த மக்களுக்கு உதவிய மக்களுக்கு நாம் சேவையாற்ற வேண்டும். நாம் வேலைச் செய்வோம் என்றார்.

 

Sat, 12/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை