சிரிய அரச படை உக்கிர தாக்குதல்: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

சிரியாவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதியான இத்லிப்பை நோக்கி ரஷ்ய ஆதரவு சிரிய அரச படையினர் முன்னேற ஆரம்பித்ததை அடுத்து அங்குள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் துருக்கி நாட்டு எல்லையை நோக்கி வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

இத்லிப்பின் கிழக்கு மற்றும் தெற்கில் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்கள் மீது தொடர்ந்து நான்காவது நாளாகவும் குண்டு வீச்சு இடம்பெற்று வருவதாக செயற்பாட்டாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டனர். இதனால் பொதுமக்கள் வெளியேறி வருவதோடு கடந்த செப்டெம்பருக்குப் பின் அதிகமான மக்கள் வெளியேற ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

“பொதுமக்கள் மற்றும் போராளிகளை துரத்தும் நோக்கில் பொதுமக்களின் கட்டுமானங்கள் மீது பீப்பாய் குண்டுகள் மற்றும் வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன” என்று உள்ளுர் செயற்பாட்டாளர் சுலைமான் அப்துல்காதர் குறிப்பிட்டுள்ளார்.

கிளர்ச்சியாளர் முன்னரங்குகளை முறியடித்து அரச படை தெற்கு மற்றும் கிழக்கு இத்லிப்பில் முன்னேற்றம் கண்டுள்ளது.

மாரத் அல் நுமான் மாவட்டத்தின் கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களை விடுவிப்பதற்கு இராணுவத்தால் முடிந்தது என்று சிறிய அரச செய்தி நிறுவனமான சானா கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. அரச படையின் வான் தாக்குதல்கள் உக்குரமடைந்திருக்கும் நிலையில் கடந்த ஒருசில வாரங்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டிருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக சிரிய பாதுகாப்பு அமைப்பின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிராந்தியத்தில் இருந்து கடந்த இரு தினங்களுக்குள் குறைந்தது 25,000 பொதுமக்கள் எல்லையை நோக்கி இடம்பெயர்ந்திருப்பதாக துருக்கி அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது. துருக்கியுடனான எல்லைக்கு அருகில் சுமார் ஒரு மில்லியன் சிரிய அகதிகள் ஏற்கனவே வாழ்ந்து வருவதோடு, அந்த முகாம்கள் ஏற்கனவே நிரம்பியுள்ளன.

சிரியாவில் இருந்து புதிய அகதிகளின் வருகையை தமது நாட்டால் கையாள முடியாது என்று துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் எச்சரித்துள்ளார்.

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை