சுவிஸ் தூதரக பணியாளர் கைது

30ஆம் திகதிவரை விளக்கமறியல்

கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர் கானியா வெனிஸ்டர் பிரான்சிஸை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த தூதரக அதிகாரியை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். பொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மாஅதிபர் அறிவுறுத்தியதாக சட்ட மாஅதிபரின் இணைப்பதிகாரி அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டார்.

சுவிஸர்லாந்து தூதரக பெண் அதிகாரி நேற்று ஆறாவது நாளாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். காலை 9 மணியளவில் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவர் அங்கொடை தேசிய மனநல மருத்துவ சேவை பிரிவிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையிலே பொய்ச் சாட்சியமளித்து அரசை அசௌகரியத்திற்குள்ளாக்கியது தொடர்பில் அவரை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கினார்.

நீதிமன்ற உத்தரவிற்கமைய கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். அதனை தொடர்ந்து அவர் பல தடவைகள் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுவிஸர்லாந்து தூதரகத்தின் கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான நிலையில் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதேவேளை சுவிஸர்லாந்து தூதரக பெண் அதிகாரி வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு எதிர்வரும் 17ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

Tue, 12/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை