மீலாத் விழாவில் புலமை தாரகைகள் கௌரவிப்பு

அக்கரைப்பற்று அம்பலத்தாறு அஷ்-ஷேய்க் சிக்கந்தர் வொலியுல்லாஹ் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட மீலாத் விழா மற்றும் புலமைத் தாரகைகள் கௌரவிப்பு நிகழ்வுகள் அண்மையில் அம்பலத்தாறு அல்-மஸ்ஜிதுல் நூராணியா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இடம் பெற்றது.

அம்பலத்தாறு கிராமத் தலைவரும், அல்-மஸ்ஜிதுல் நூராணியா ஜும்ஆ பள்ளிவாசல் உப தலைவருமான ஏ.ஆர்.எம்.ஜஹ்பர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அதிதிகளாக அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாஸீக், பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.பர்ஸாத், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாறைப் பிராந்திய பிரதம பொறியியலாளர் என்.ரி.சிராஜுதீன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறைமாவட்ட அமைப்பாளர் ஐ.எச்.அப்துல் வஹாப், அல்-மத்ரசதுல் நூராணியா மத்ரசா அதிபர் எம்.அனஸ் மௌலவி, மௌலவி ஏ. சலீம் (மன்பயி), ஜனாஸா நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், மௌலவிமார்கள், அல்-மத்ரசதுல் நூராணியா மத்ரசா மாணவ மாணவிகள், ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

நூராணியா மத்ரசா அதிபர் எம்.அனஸ் மௌலவி மற்றும் மௌலவி ஏ.சலீம் (மன்பயி) ஆகியோர் பெருமானாரின் சிறப்புக்கள், அவர்களின் முன்மாதிரியான குர்ஆன், அல்ஹதீஸ் அடிப்படையிலான வாழ்க்கை முறைகளை மனித சமுதாயம் பின்பற்றுவதன் மூலம் வாழ்வில் ஏற்படக் கூடிய ஈடேற்றம் பற்றி உரையாற்றினர். இந்நிகழ்வில் மத்ரசா மாணவர்களின் பேச்சுக்கள், இஸ்லாமிய பாடல்கள், கஸீதாக்கள், கவிதைகள் என்பனவும் இடம் பெற்றன.

நிகழ்வில் இந்த வருடம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் அம்பலத்தாறு சேகு சிக்கந்தர் வித்தியாலயத்திலிருந்து தோற்றி 171 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த ஒரே ஒரு மாணவியாகிய அலியார் பாத்திமா ஹப்ஸாவை (171) தவிசாளர் எம்.ஏ.றாஸீக் பிரதம பொறியியலாளர் என்.ரி.சிராஜுதீன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ஐ.எச்.அப்துல் வஹாப் ஆகியோர் பதக்கம் அணிவித்து நினைவுச் சின்னம், சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

(அக்கரைப்பற்று தினகரன் சுழற்சி நிருபர்)

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை