காமினி, லலித்தால் கூட முடியவில்லை, ஐ.தே.கவை எவராலும் துண்டாட முடியாது

காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி போன்றோர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்படுத்திய நெருக்கடியில் கூட அவர்களால் வெற்றிகொள்ள முடியாமல் போன நிலையில் இன்று சிலர் கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என முன்னாள் அமைச்சரும், நுவரெலியா, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நவீன் திசாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.

70 ஆண்டுகளுக்கும் மேலான ஜனநாயக வரலாற்றைக் கொண்ட ஒரு கட்சியை சின்னா பின்னாப்படுத்த சில சக்திகள் முனைப்புக்காட்டி வருகின்றன. அந்தச் சக்திகளை அடையாளம் கண்டு செயற்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே நவீன் திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

எனது தந்தை காமினி திசாநாயக்கா, லலித் அத்துலத் முதலி போன்றோர் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் முரண்பட்டு தனித்துச் செயற்பட்டு கட்சி துண்டாடப்படும் நிலைக்கு இட்டுச்சென்றனர். ஆனால் அன்று அவர்களால் அதில் வெற்றி பெற முடியாது போனது. ஐ. தே. க.வுக்குள் காணப்பட்ட ஜனநாயக மரபு காரணமாக கட்சி இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் அண்மைக்காலமாக கட்சிக்குள் சிலர் ஐ. தே கவை சின்னாபின்னப்படுத்தும் முயற்சியிலீடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் நாம் அடைந்த பின்னடைவுக்கு ஒற்றுமையின்மையும் ஒரு காரணமாகும். இதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தின் மீது பலம்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுப்படுத்தித் துண்டாட எவருக்கும் இடமளிக்க முடியாது. எமக்கிடையேயான கருத்து முரண்பாடுகளை உள்ளே இருந்துதான் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயற்பட முனையக்கூடாது. நாளை (இன்று) நடைபெறும் கட்சிப் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

 

Thu, 12/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை