அவுஸ்திரேலியா தொடர் வெற்றி

நியூசிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 247 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2–0 என கைப்பற்றியது.

மெல்போர்ன் மைதானத்தில் பொக்சின் தின டெஸ்ட் போட்டியாக நடைபெற்ற இந்தப் போட்டியின் நான்காவது நாளான நேற்று 488 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி 240 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

எனினும் அரம்ப வீரர் டொம் பிளன்டல் தனித்துப் போராடி 121 ஓட்டங்களை பெற்றார்.

அவுஸ்திரேலியா சார்பில் அதிரடியாக பந்து வீசிய நேதன் லியோன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ஜேம்ஸ் பெட்டிசன் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 467 ஓட்டங்களை பெற்றதோடு தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி 148 ஓட்டங்களுக்கே சுருண்டது.

முதல் இன்னிங்ஸில் 319 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் கடந்த சனிக்கிழமை தனது இரண்டவாது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நேற்றும் தனது துடுப்பாட்டத்தை தொடர்ந்தது.

இதன்படி அந்த அணி 54.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தி நியூசிலாந்துக்கு சவாலான வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

இதன்போது முதல் இன்னிங்ஸில் சதம்பெற்ற ஆஸி. வீரர் ட்ரவிஸ் ஹெட் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

ஆஸி. அணி டெஸ்ட் தொடரை வென்றிருக்கும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது.

Mon, 12/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை