வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஒரு மாதகாலமாக அம்பாறை மாவட்ட மக்கள் வெள்ள அனர்த்தத்தால் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை பிரதேச செயலகங்கள் ஊடாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் மாவட்ட செயலகமும் இணைந்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டது.

இதற்கமைவாக பிரதேச செயலகங்கள் வழங்கிய பாதிக்கப்பட்ட குடும்பத் தகவல்கள் அதிகமாக இருப்பதாக தெரிவித்து அதனை குறைப்பதற்குரிய நடவடிக்கையினை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் மாவட்ட செயலகமும் மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஆயினும் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப எண்ணிக்ைகயை குறைப்பது பொருத்தமற்றது எனவும், பொதுவாக அனைத்து மக்களும் வெள்ளத்தால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி வருவதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் வெள்ள அனர்த்தத்தால் தொழிலின்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேநேரம் வெள்ள அனர்த்தத்தால் ஆலையடிவேம்பு பிரதேசம், அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதுடன் திருக்கோவில், பொத்துவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, கல்முனை, சம்மாந்துறை, சாய்ந்தமருது, நாவிதன்வெளி உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை