சிரிய விவகாரம் குறித்து பேசுவதற்கு துருக்கி தூதுக் குழு ரஷ்யா விரைவு

சிரியாவில் ரஷ்ய ஆதரவு தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் துருக்கி எல்லையை நோக்கி வரும் நிலையில் அது தொடர்பில் பேசுவதற்கு துருக்கி தூதுக் குழு ஒன்று ரஷ்யா சென்றுள்ளது.

மோதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் வடக்கு சிரியாவில் துருக்கி எல்லைக்கு அருகில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட குறைந்தது எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய அகதிகள் எண்ணிக்கையாக துருக்கி ஏற்கனவே 3.7 மில்லியன் சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் புதிதாக படையெடுத்திருக்கும் அகதிகளை தமது நாட்டால் கையாள முடியாது என்று துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டிருந்தார். ரஷ்யாவின் வடமேற்கு இத்லிப் மாகாணத்தின் மீதான தாக்குதல்களை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு அவர் அழுத்தம் கொடுத்திருந்தார்.

“சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து சுமார் 30 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் துருக்கியை நோக்கி வந்திருக்கிறார்கள். இதில் சிரியாவின் வடக்கில் இத்லிப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 80,000 பேர் துருக்கி எல்லையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

சிரிய அகதிகளின் இந்தப் புதிய அலையை துருக்கியால் மட்டும் தனியாகச் சுமக்க முடியாது. இத்லிப் பகுதியில் வன்முறையைக் கட்டுப்படுத்தாவிட்டால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் தாக்கம் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் உணரப்படும்” என்று எர்துவான் கூறியிருந்தார்.

எர்துவான் கணித்த 80,000 பேரை விடவும் துருக்கி எல்லையை நோக்கி 120,000 சிரியர்கள் தப்பிவருவதாக துருக்கியை தளமாகக் கொண்ட மனிதாபிமான நிவாரண அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதல்களை உடன் நிறுத்தும்படி ஐ.நா செயலாளர் நாயகம் அட்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வாரத்தில் மாத்திரம் 30,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக அவரது பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

“பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் சுதந்திரமான நடமாட்டத்திற்கான தமது பொறுப்பு தொடர்பில் செயலாளர் நாயகம் அனைத்து தரப்பிற்கு ஞாபகமூட்டுகிறார்” என்று ஐ.நா பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த எட்டரை ஆண்டுகளாக நீடித்துவரும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதியான இத்லிப் பிராந்தியத்தை மீட்பது குறித்து சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் உறுதியாக உள்ளார்.

சிரிய யுத்தத்தில் அஸாத் படைக்கு ரஷ்யா மற்றும் ஈரான் தீர்க்கமான ஆதரவை வழங்கி வருவதோடு அசாத்துக்கு எதிராக சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு வழங்குகிறது.

இத்லிப் மாகாணமான மாரத் எல் நூமான் நகரில் இருந்து தப்பிச் செல்ல முயலும் பொதுமக்களை ஏற்றிய வாகனங்கள் மீது ரஷ்யா மற்றும் சிரிய இராணுவ ஜெட்கள் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிக்கி இருப்பதாக உதவிக் குழுக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“நகரத்தை விட்டு வெளியேறும் எந்த ஒரு வாகனத்தின் மீதும் ரஷ்ய ஜெட்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நகரத்தில் இருக்கும் பொதுமக்கள் பெரும் பேரழிவுச் சூழல் ஒன்றுக்கு முகம்கொடுத்துள்ளனர்” என்று அங்குள்ள செயற்பாட்டாளர் முஹமது ரஷீத் குறிப்பிட்டுள்ளார்.

தென் கிழக்கு சிரியாவில் உக்கிர மோதல் இடம்பெற்றதாக கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்ட சிரிய இராணுவம் பல “தீவிரவாதிகள்” கொல்லப்பட்டு பல கிராமங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தது.

“மழை மற்றும் குளிருக்கு மத்தியில் போர்வைகள் இன்றி வெட்ட வெளியில் தரையில் மக்கள் உறங்குகின்றனர்” என்று தமது குடும்பத்தினருடன் தப்பிவந்த பெராஸ் சாத் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படுவதாக கூறுவதை சிரியா மற்றும் ரஷ்யா மறுத்துள்ளன. தாம் அல் கொய்தாவினால் ஈர்க்கப்பட்ட மதப் போராளிகளுடனேயே சண்டையிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளன.

Wed, 12/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை