மண்சரிவு: வீடு மண்ணில் புதையுண்டு நால்வர் பலி

 சீரற்ற காலநிலை; 4126 பேர் பாதிப்பு

வலப்பனையில் பரிதாபம்

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

18 மாவட்டங்களில் அடை மழை; வௌ்ளம்

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 1156 குடும்பங்களைச் சேர்ந்த 4126 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 4 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

வலப்பனையில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடொன்று மண்ணில் புதையுண்ட நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரே பலியாகியுள்ளனர். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் சில தினங்களாக பெய்துவரும் அடைமழையினால் 1004 குடும்பங்களைச் சேர்ந்த 3623 பேரும், வடமாகாணத்தில் 130 குடும்பங்களைச் சேர்ந்த 406 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேரும், மத்திய மாகாணத்தில் 30 இற்கும் அதிகமான குடும்பங்களும் பாதிக்கபட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்திலுள்ள வலப்பனை பிரதேசத்தில்

 கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் வீடொன்று மண்ணில் புதைந்ததில் ஒரே குடும்பத்தைச் ​சேர்ந்த நால்வர் மரணமடைந்துள்ளனர். இவர்களிடையே மண்சரிவில் புதைந்து க.பொ.த சாதாரண தர மாணவர் ஒருவர் காணாமற் போனதோடு அவரின் சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதே வேளை,களு கங்கை, ஜின் கங்கை மற்றும் நில்வளா, அத்தனகலா ஓயா, மஹா ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டங்கள் உயர்வடைந்துள்ளதாகவும் இராஜாங்கனை, உடவளவ, அங்கமுவ, காசல்ரீ, லக்ஷபான, மேல்கொத்மலை மற்றும் தெதுறு ஓயா உள்ளிட்ட பல நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. களுகங்கை பாய்ந்தோடும் இரத்தினபுரி, எல்லகவ, மில்லகந்த உபட்ட பல பிரதேசங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி, பதுளை, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மண் மேடுகள் சரிந்து விழுந்துள்ளமையால் பதுளை மாவட்டம் உட்பட நாடுமுழுவதும் பல இடங்களில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவு உட்பட பல இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் அல்துமுல்ல, பசறை, லுணுகல, எல்ல, ஹாலிஎல்ல, பதுளை, பண்டாரவளை உள்ளிட்ட பிரதேசங்;களுக்கும் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, வரக்காபொல, தெரணியகலை, எட்டியாந்தோட்டை உள்ளிட்ட பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, அநுராதபுரம் மாவட்டங்களிலும் நாட்டில் மேலும் சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தின் பிம்புர பிரதேசத்தில் அதி கூடிய மழை வீழ்ச்சியாக 243.5 மி.மீ பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

18 மாவட்டங்களில்

கடும் மழை எதிர்பார்ப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய மாவட்டங்களிலும் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகுமெனவும் பொதுவாக நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 தொடக்கம் 100 மில்லி மீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து பொத்துவில் ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் தென்கிழக்கு முதல் தெற்கு வரையான திசைகளிலிருந்து காற்று வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை பலமான காற்று வீசக் கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

மின்துண்டிப்பு

நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பண்டாரவளை, ஹப்புத்தளை, தியத்தலாவ, வெலிமட, ருவண்வெல்ல, பலாங்கொடை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு மின்சார விநியோக தடை ஏற்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையால் சுமார் ஐயாயிரம் மின் பாவணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்கள் தங்குவதற்காக இடைதங்கல் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பிரதேச செயலகங்கள் ஊடாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் ஊடாகவும் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

வலப்பனை மண்சரிவு

நுவரெலியா வலப்பனை, மூன்வத்த, மலபட்டாவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் (30) இரவு 7.30 மணியளவில் பாரிய மண்வரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவுக்குள்ளான வீடு முற்றாக மண்ணால் மூடப்பட்டுள்ளதுடன் அவ்வீட்டில் வசித்து வந்த தம்பதியரும் அடுத்த வருடம் உயர்தர பரீட்சை எழுதவுள்ள பதினேழு வயதான அவர்களின் மகளுமே மரணமடைந்துள்ளனர். இன்று க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள ஜீ. ஜீ. கலன பெதும் என்னும் பதினைந்து வயது மகன் காணாமற்போன நிலையில் நேற்று பிற்பகல் அவரும் சடலமாக மீட்கப்பட்டதாக தேடும் பணியில் ஈடுபட்ட இராணுவத்தினர் தெரிவித்தனர்.

நுவரெலிய இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி மேஜர் அசித ரணதிலக்கவின் வழிகாட்டலில் நுவரெலிய மூன்றாவது இலக்க சிங்க ரெஜிமேன்டின் 50 பேரடங்கிய குழுவினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

வீடு அமைந்திருந்த இடத்துக்கு கீழே மண்ணில் புதையுண்டிருந்த ஜீ. ஜீ. ரண்பண்டா (51) , கே. ஜி. பிசோ மெனிக்கே (48) , கே. எம். ஜி. ஜி. தினேஷா கருணாரத்ன (17) ஆகியோரின் சடலங்கள் நேற்று (01) காலை கண்டுபிடிக்கப்பட்டதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் ரோஹண புஷ்பகுமார தெரிவித்தார்.

மண்சரிவுக்குட்பட்ட வீட்டில் குடியிருந்தவர்களை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் அறிவிக்கப்பட்டிருந்ததாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

கடும் மழை காரணமாக நுவரெலியா, ஹாவாஎலிய, கந்தப்பனை கல்பாலம் ஆகிய பிரதேசங்களில் மரக்கறி பயிர்செய்கையும் பாதிப்படைந்துள்ளது. வலப்பனையில் மண்சரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கையை மேற்பார்வையிட ரயில்வே துறை இராஜாங்க அமைச்சர் சீ. பீ. ரத்நாயக்கவும் அவ்விடத்துக்கு நேரில் விஜயம் செய்து மீட்பு நடவடிக்கைகளை அவதானித்தார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 12/02/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக