டெக்சாஸ் தேவாலயத்தில் சூடு: துப்பாக்கிதாரியுடன் மூவர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸில் தேவாலம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் தேவாலய ஊழியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

போர்ட் வேர்த் பகுதிக்கு அருகில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த துப்பாக்கிதாரி சரமாரியாக சுட ஆரம்பித்துள்ளார். 2 பேரை சுட்ட அந்த துப்பாக்கிதாரி மீது தேவாலய ஊழியர் ஒருவர் திருப்பிச் சுட்டதாக கூறப்படுகிறது.

வெறும் ஆறு வினாடிகள் மாத்திரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான நோக்கம் பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த தேவாலயத்தின் சபை உறுப்பினர்கள் இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சமூகவலைத்தளத்தில் நேரலையாக பதிவாகியுள்ளது. இதில் தேவாலயம் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களின் அலறல் சத்தமே கேட்டது. பலர் தேவாலயத்திலிருந்த மேஜைக்குக் கீழ் பதுங்கிக்கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து டெக்சாஸின் ஆளுநர் ரெக் போட் கூறுகையில், “வழிபாடு நடைபெறும் இடம் புனிதமாக இருக்கவேண்டும், இந்த நேரத்தில் நிறைய உயிரிழப்புகளைத் தடுக்க தேவாலய உறுப்பினர்கள் அந்த துப்பாக்கி ஏந்திய நபரைச் சுட்டுக் கொன்றதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெக்சாஸில் உள்ள வழிப்பாட்டு தலங்களில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் அனுமதிக்கப்படுவதாகச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

டெக்சாஸ் மாநிலத்தின் சதர்லேண்ட் பகுதியில் உள்ள தேவாலயத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த துப்பாக்கி சூட்டில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை