மண்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள்

ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் தொண்டமான் பணிப்பு

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட வெதமுல்ல லில்லிஸ்லேன் தோட்டத்தில் கடந்த காலத்தில் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கபட்ட 98 குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

கடந்த அரசாங்கத்தினால் லில்லிஸ்லேன் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள், குழறுபடிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

குறிப்பாக தேசிய கட்டிட ஆராச்சி நிலையத்தால் நிராகரிக்கப்பட்ட இடங்களுக்கு பதிலாக மாற்று இடங்கள் வழங்குவது தொடர்பாகவும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை எவ்வாறு மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் ஊடக செயற்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு இவ்வீடமைப்பு நடைபெறும் லில்லிஸ்லேன் தோட்டத்திற்கு கொத்மலை பிரதேச சபை செயலக அதிகாரிகள், மனித வள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள், தோட்ட அதிகாரிகள் மற்றும் இதற்கு பொறுப்பாக செயற்படும் பரத் அருள்சாமியையும் நேரடியாக அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும்,

இவ்வீட்டு திட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தடுப்பு சுவர்கள் அமைப்பதற்கு தேவையான செலவு மதிப்பீட்டை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் டி.பி குமாரசிறி, மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் ராமேஸ்வரன், இ.தொ.கா வின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா, கொத்மலை பிரதேச செயலகத்தின் செயலாளர்கள், இ.தொ.காவின் பிரதி பொதுச் செயலாளர் பரத் அருள்சாமி, நுவரெலியா பிரதேச சபை தலைவர் யோகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Wed, 12/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை