பாதிக்கப்பட்டோருக்கு சமைத்த உணவு ;அம்பாறை கூட்டத்தில் அவசர தீர்மானம்

ஒருவர் மரணம்: 25,027 பேர்  பாதிப்பு; 4 வீடுகள் முற்றாக சேதம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவை வழங்குங்கள். இவ்வாறு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்ரம தலைமையில் நேற்று (10) அம்பாறை கச்சேரியில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கூட்டத்தில் வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீரதிசாநாயக்க, முன்னாள் அமைச்சர் தயாகமகே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கோடீஸ்வரன், எஸ்.எம்.எம்.இஸ்மாயில், எம்.எம்.நசீர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மழைவெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பாக சுமார் ஒரு மணிநேரம் கலந்துரையாடப்பட்டது.

கலந்துகொண்டோரில் 70 வீதமானவர்கள் தமிழ் பேசுவோராக இருந்தும் கூட்டம் சிங்களத்தில் நடாத்தப்பட்டது. சிலர் ஆங்கிலத்தில் பேசினர்.

தவிசாளர்களான கே.ஜெயசிறில் (காரைதீவு), த.கலையரசன் (நாவிதன்வெளி) ஆகியோர் மட்டும் தமிழில் பேசினர்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்கள உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் கூறுகையில்: அம்பாறை மாவட்டத்தில் இதுவரை 7,147 குடும்பங்களைச் சேர்ந்த 25,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் சொல்கின்றன. 4 வீடுகள் முற்றாகவும் 197 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்தாக இறுதிக்கட்ட தரவுகள் கூறுகின்றன.

சம்மாந்துறையில் ஒருவர் மரணித்திருக்கிறார். அட்டாளைச்சேனையில் ஒரு படகு சேதமாகியுள்ளது. 10 முகத்துவாரங்கள் வெட்டப்பட்டு கடலில் வெள்ளநீர் அனுப்பப்பட்டுள்ளது.

எமக்கு 1.5 மில்லியன் ரூபா அரசினால் வழங்கப்பட்டுள்ளது.

சமைத்த உணவு வழங்குவதற்கு அரச அதிபர் பிரதேச செயலாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார். உலருணவு வழங்குவதற்கும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

ஒரு வாரத்திற்கு ஒருவர் கொண்ட குடும்பத்திற்கு 900 ரூபாவும் இரு அங்கத்தவர்கள் கொண்ட குடும்பத்திற்கு 1100 ரூபாவும் 3 பேர் கொண்ட குடும்பத்திற்கு 1300 ரூபாவும் 4 பேரும் அதற்கு கூடுதலாக அங்கத்தவர்கள் கொண்ட குடும்பத்திற்கு 1600 ரூபாவும் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சமைத்த உணவை வழங்க நாள் ஒன்றிற்கு 300 ரூபா வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.

கரையோரப் பிரதேசத்தில் காணப்படும் வெள்ளத்தை வழிந் தோடச்செய்வதற்கு அவசர நடவடிக்கை எடுக்கவேண்டுமென பைசல் காசிம் கேட்டுக்கொண்டார்.

இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியிருப்பவர்களுக்கு மட்டுமே சமைத்த உணவை வழங்குதல் என்ற சுற்றுநிருபத்திற்கு பதிலாக புதிய சுற்றுநிருபம் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் விரைந்து உற்றார் உறவினர் வீடுகளில் தங்கியிருப்போருக்கும் வாழ்வாதாரத்தை இழந்தோருக்கும் நிவாரணத்தை உடனடியாக வழங்கமுடியுமென அரச அதிபர் பண்டாரநாயக்க கருத்துரைத்தார்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ​ெடாக்டர் குண. சுகுணன் கூறுகையில், வெள்ளம் அதிகரிக்க தொற்றுநோயின் தாக்கமும் அதிகரிக்கிறது. டெங்கின் தாக்கம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. ஒரு வகைவைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. எதனையும் முகம்கொடுக்க நாம் தயாராகவுள்ளோம் என்றார்.

காரைதீவு குறூப் நிருபர்

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை