அஞ்சலோட்டத்தில் தெற்காசிய சாதனையுடன் இலங்கை தங்கம்: அர்ஷிகாவுக்கு வெள்ளி

தெற்காசிய விளையாட்டு போட்டி

நேபாளத்தில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் இலங்கை புதிய போட்டிச் சாதனையை படைத்தது.

காத்மண்டு, தரசரத் விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவரும் மெய்வல்லுநர் போட்டிகளின் நான்காவது நாளான நேற்று இலங்கை மேலும் மூன்று தங்கப்பதக்கங்களை வென்றதோடு 100 மீற்றர் அஞ்சலோட்டத்தின் ஆடவர், பெண்கள் இரு பிரிவுகளிலும் முதலிடத்தை பெற்றது.

இதில் இமேஷ ஏஷான், சானுக்க சந்தீப், வினோஜ் சுரஞ்சய மற்றும் யுபுன் பிரியதர்ஷன ஆகிய வீரர்களைக் கொண்ட இலங்கை அணியின் கடைசி இரண்டு வீரர்களும் வேகத்தை பெற்று நெருக்கடி இன்றி முதலிடத்தைப் பெற்றது.

இதன்போது இலங்கை 4x100 மீற்றர் அஞ்சலோட்ட அணி 39.14 விநாடிகளில் ஓடி முடித்து புதிய போட்டி சாதனையை படைத்தது. இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அஞ்சலோட்ட அணி போட்டித் தூரத்தை 39.91 வினாடிகளில் முடித்ததே சாதனையாக இருந்தது.

இதில் இந்தியா (40.50 விநாடி) மற்றும் பாகிஸ்தான் (40.76 விநாடி) அணிகள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தன.

பெண்களுக்கான 4x100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியிலும் இலங்கை தங்கப் பதக்கம் வென்றது. லக்ஷானி சுகன்தி, சாரங்கி சில்வா, சதீபா ஹென்டர்சன் மற்றும் அமேஷா டி சில்வா ஆகிய வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை அணி 44.89 விநாடிகளில் போட்டித் தூரத்தை முடித்து முதலிடத்தைப் பெற்றது. 45.36 விநாடியில் போட்டியை முடித்த இந்திய அணி இரண்டாம் இடத்தையும் பாகிஸ்தான் 46.74 விநாடிகளில் முடித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

இதேவேளை நெடுந்தூர ஓட்ட வீராங்கனை நிலானி ரத்நாயக்க தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார். நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர் இந்திய வீராங்கனை பாருல் சௌத்ரியை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்தார். அவர் போட்டித் தூரத்தை 16 நிமிடம் மற்றும் 55.18 விநாடிகளில் முடித்தார்.

நிலானி முன்னதாக பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் காயமடைந்த நிமாலி லியனாரச்சிக்கு பதிலாக பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நிலானி 5000 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் ஒரு மாற்று வீராங்கனையாகவே பங்கேற்றார். 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கவிருந்த மரதன் ஓட்ட வீராங்கனை ஹிருனி விஜேரத்ன விலகிக் கொண்ட நிலையிலேயே 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்ட வீராங்கனையான நிலானி பங்கேற்றார்.

எனினும் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கைக்கு பதக்கம் கிட்டவில்லை. 10,000 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற குமார் சன்முகேஸ்வரன் 6 ஆவது இடத்தையே பிடித்ததோடு இலங்கை சார்பில் பங்கேற்ற மற்ற வீரரான சமன்த புஷ்பகுமார நான்காவது இடத்தில் போட்டியை முடித்தார்.

நேற்று ஆரம்பத்தில் நடைபெற்ற பெண்களுக்கான தடைதாண்டி ஓட்டப் போட்டியில் கௌஷல்யா மதுஷானி 1:00.40 நிமிடத்தில் போட்டித் தூரத்தை முடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். பாகிஸ்தானின் நஜீமா பர்வீன் 1,00.35 நிமிடத்தில் போட்டியை முடித்து தங்கப் பதக்கத்தை வென்றதோடு இந்தியாவின் வீர்பால் கவுர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

குண்டெறிதல் போட்டியிலும் இலங்கை வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றது. பெண்களுக்கான குண்டெறிதலில் 14.35 மீற்றர் தூரம் வீசிய தாரிக்கா பெர்னாண்டோ இரண்டாவது இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆடவர் பிரிவில் 15.55 மீற்றர் தூரம் வீசிய சமித் மதுசங்க வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன்படி தடகளப் போட்டிகளில் இலங்கை நேற்று மொத்தம் மூன்று தங்கம் இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றது.

இந்நிலையில் தடகளப் போட்டிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது. இறுதிநாளில் மரதன், 800 மீற்றர், 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகள் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகள் நடைபெறவுள்ளன. 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை ஆடவர் மற்றும் பெண்கள் அணிகள் தங்கப் பதக்கம் வென்ற நிலையில் அந்தப் போட்டிகளில் தங்க எதிர்பார்ப்பை தக்கவைத்துக் கொள்ள இலங்கையால் முடியுமாகியுள்ளது.

மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில்

பொகாராவில் நடைபெற்று வரும் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நேபாளத்தை நேற்று 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளையும் இழந்து 118 ஓட்டங்களை பெற்றநிலையில் நேபாள மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களையே பெற்றது.

இதன்படி இலங்கை மகளிர் ஆரம்ப சுற்று போட்டிகளில் பங்களாதேஷிடம் மாத்திரம் தோல்வி அடைந்து அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலோன இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெறவுள்ளது. எனவே, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை வெல்வது உறுதியாகியுள்ளது.

கொல்பில் இலங்கைக்கு

2 தங்கம்

7 வீரர்களுடன் பங்கேற்ற இலங்கை கொல்ப் அணி 13 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் ஆறு வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இந்த அணிக்கு சிசிர குமார, சானக்க பெரேரா, பீ.ஏ. சஞ்சீவ, என். ரங்க, டீ. செல்வரத்னம், ஜீ. யட்டவர மற்றும் டானியா பாலசூரிய ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

பூப்பந்தில் தங்கம்

இலங்கை பூப்பந்து வரலாற்றில் முதல் முறையாக பெண்கள் இரட்டையர் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது. காவிதி சிரிமன்னகே மற்றும் திலினி ஹென்டஹே தங்கப் பதக்கத்தை வென்றதோடு அச்சினி ரத்னசிறி மற்றும் உபுல வீரசிங்க ஜோடி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இலங்கை வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

பளுதூக்கல், மேசைப்பந்து,

சைக்கிளோட்டத்தில் பதக்கங்கள்

சைக்கிளோட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் தினேஷா தில்ருக்ஷி மற்றும் உதேஷானி குமாரசிங்க முறையே வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்றதோடு, ஆண்கள் பிரிவில் அவிஷ்க மாவத்த வெண்கலப் பதக்கம் வென்றார்.

அதேபோன்று பளுதூக்கல் போட்டியில் யாழ். வீராங்கனை விஜயபாஸ்கர் அர்ஷிக்கா 64 கிலோகிராம் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அவர் ஸ்னட்ச் முறையிவ் 70 கிலோகிராமும் கிளீன் அன்ட் ஜர்க் முறையில் 100 கிலோகிராமுமாக 170 கிலோகிராம் எடையை தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றதோடு நேபாளம் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

பளுதூக்கல் போட்டிகளின் இரண்டாவது நாளான நேற்று ஆண்களுக்கான 67 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட சதுரங்க லக்மால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மறுபுறம் மேசைப் பந்து போட்டிகளில் இலங்கை நேற்று இரண்டு வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது. மேசைப் பந்து ஒற்றையர் பிரிவில் எரந்தி வருசுவிதான மற்றும் இஷாரா மதுமாலி மூன்றாம் இடங்களை பிடித்தனர்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாவது நாளாக நேற்று நீச்சல் போட்டிகள் இடம்பெற்றன. அதில் முதலாவது பதக்கத்தை டிலன்க ஷெஹான் வென்றார். ஆண்களுக்கான 1500 மீற்றர் ப்ரீ ஸ்டைல் போட்டியில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதன்படி நேற்று மாலையாகும்போதும் 23 தங்கப் பதக்கங்களை வென்றிருந்த இலங்கை பதக்கப்பட்டியலில் இந்தியா மற்றும் நேபாளத்திற்கு அடுத்து தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடித்தது.

நேபாளத்திலிருந்து
எம்.எஸ்.எம்.பிர்தௌஸ் 

Sat, 12/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை