மன்னார் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாய்த்தர்க்கம்

இறால் பண்ணை விவகாரம்;

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இறால் பண்ணைக்கு அனுமதி வழங்கியமை தொடர்பான விவாதத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கும் மன்னார் மற்றும் முசலி பிரதேச சபை தலைருக்கும் இடையில் கடுமையான வாத விவாதம் இடம்பெற்றது.

இவ் வருடத்துக்கான இறுதியும், இரண்டாவதுமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் நேற்று இடம் பெற்றது. இதில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் திணைக்கள தலைவர்கள், படைத்தரப்பினரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் அமைக்கப்பட்ட இறால் பண்ணை தொடர்பாக பொது மக்களால் கொண்டுவரப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது அவ் இறால் பண்ணைக்கு அனுமதி வழங்கியமை தொடர்பாக வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்றது. இந்நிலையில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருக்கும், மன்னார் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபையின் தலைவர்கள் ஆகியோருக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் குறுக்கிட்டு கருத்துக்களை முன் வைத்தார். குறித்த இறால் பண்ணையினால் சூழல் மாசடைவதாகவும் மீன்பிடி பாதிக்கப்படுவதாகவும் எருக்கலம் பிட்டி மீனவ அமைப்புகள் மற்றும் பொது அமைப்புக்கள் தெரிவித்திருந்தன. இறால் பண்ணை அமைப்பதற்கான அனுமதி வழங்கிய அரச நிறுவனங்கள் மற்றும் எருக்கலம்பிட்டி பொது அமைப்புக்கள் உட்பட பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகிய அனைத்தையும் இணைத்து இறால் பண்ணை தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்ளவதாக முடிவெடுக்கப்பட்டது.

மன்னார் குறூப் நிருபர்

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை