நீச்சலில் தேசிய சாதனை முறியடிப்பு; மத்தியூவுக்கு மேலும் மூன்று தங்கம்

தெற்காசிய விளையாட்டு போட்டி
விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு நாள் இன்று

நேபாளத்தில் நடைபெற்றுவரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் நீச்சல் நட்சத்திரம் மத்தியூ அபேசிங்க நேற்று மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். இதன்மூலம் அவர் இம்முறை தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 7 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 9 ஆவது நாள் போட்டிகள் நேற்று இடம்பெற்றன. இதில் தடகளப் போட்டிகளுக்குப் பின் இலங்கைக்கு அதிக தங்கப் பதக்கங்களை வென்று தந்த நீச்சல் போட்டிகளின் இறுதி நாள் போட்டிகளும் இடம்பெற்றன.

இதில் ஆண்களுக்கான 200 மீற்றர் மட்லி போட்டியில் மத்தியூ அபேசிங்க தேசிய சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார். தொடர்ந்து அவர் பங்கேற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ப்ரீ ஸ்டைல் போட்டியிலும் முதலிடத்தைப் பிடித்து தனது 6ஆவது தங்கப் பதக்கத்தை வென்றார். இந்தப் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்ற மற்ற வீரரான அகலங்க பீரிஸ் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீற்றர் பட்டர்பிளை போட்டியிலும் மத்தியூ அபேசிங்க தங்கப்பதக்கம் வென்று தேசிய சாதனையையும் முறியடித்தார். இந்த போட்டியில் அகலங்க பீரிஸ் மூன்றாவது வந்து வெண்கலம் வென்றார்.

மத்தியூ அபோசிங்க ஏற்கனவே ஆண்களுக்கான 500 மீற்றர் ப்ரீ ஸ்டைல், 200 மீற்றர் ப்ரீ ஸ்டைல், 100 மீற்றர் பட்டர் பிளை மற்றும் 100 மீற்றர் அஞ்சலோட்ட நீச்சல் போட்டிகளில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல தேசிய சாதனைகளுக்கு சொந்தம் கொண்டாடும் மத்தியு அபேசிங்க 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும் 7 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று இலங்கைக்காக தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற வீரரான ஜூலியன் போலிங்கின் சாதனையை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 100 மீற்றர் மெட்லி அஞ்சலோட்ட நீச்சல் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இதன்படி தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்பதாவது நாள் நிறைவின்போது இலங்கை மொத்தம் 39 தங்கப் பதக்கங்களை வென்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

கிரிக்கெட்டில் வெள்ளி

கீர்த்திபூரில் நடைபெற்ற ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட அணி பங்களாதேஷ் 23 வயதுக்கு உட்பட்ட அணியிடம் 7 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்து வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குழுநிலை போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய உற்சாகத்துடனேயே இலங்கை நேற்று இறுதிப் போட்டியில் களமிறங்கியது. எனினும் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி 20 ஓவர்களுக்கும் சகல விக்கெட்டுகளையும் இழந்து 122 ஓட்டங்களையே பெற்றது. சம்மு அஷான் அதிகபட்சமாக 25 ஓட்டங்களை பெற்றார்.

பதிலெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 18.1 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 125 ஓட்டங்களை பெற்று இலகு வெற்றியீட்டியது.

எற்கனவே இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியும் பங்களாதேஷிடம் இறுதிப் போட்டியில் தோற்று வெள்ளிப் பதக்கத்தையே வென்றது.

கபடி வரலாற்றில் முதல் வெள்ளி

பலம்மிக்க இந்திய ஆடவர் கபடி அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற கபடிப் போட்டியில் இலங்கை கபடி அணி 51- – 18 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியை சந்தித்தது. எனினும் தெற்காசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் இலங்கை கபடி அணி ஒன்று வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றது இதுவே முதல் முறையாகும்.

துப்பாக்கிச்சுடுதல், மல்யுத்தத்தில் மூன்று வெள்ளி

தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நேற்று நிறைவடைந்ததோடு அதில் இலங்கை ஒரு வெள்ளிப் பதக்கத்தை வெல்ல முடிந்தது. 10 மீற்றர் எயார் பிஸ்டோல் போட்டியில் சுரங்க பெர்னாண்டோ மற்றும் அமாலி குலதுங்க இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

துப்பாக்கி சுடுதலில் இலங்கையால் ஒரு தங்கப் பதப்பத்தைக் கூட வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பெண்களுக்கான 68 கிலோகிராம் எடைப் பிரிவின் மல்யுத்தப் போட்டியில் மதுவன்தி ரூபசிங்க வெள்ளிப் பத்தக்கத்தை வென்றதோடு ஆண்களுக்கான 74 கிலோகிராம் எடைப் பிரிவில் லக்மால் விஜேசூரிய மற்றொரு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நிறைவு

நேபாளத்தில் கடந்த ஒன்பது நாட்களாக இடம்பெற்று வந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. நிறைவு நிகழ்வுகள் இன்று மாலை கோலாகலமாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இறுதி நாளான இன்று 21 பதக்கங்களுக்கான போட்டிகள் இடம்பெறவுள்ளன.ஸ்குவஷ் போட்டியில் இரண்டு பதக்கங்களுக்கான போட்டிகள் இன்று நடைபெறவிருப்பதோடு ஜூடோவில் 6 பதக்கங்களுக்கான போட்டிகள் இடம்பெறவுள்ளன. குத்துச்சண்டை போட்டிகளில் அதிகபட்சம் 10 பதக்கங்களுக்கான போட்டிகள் இடம்பெறவுள்ளன. அதேபோன்று தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் கடைசி போட்டியாக இன்று ஆண்களுக்கான கால்பந்து போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் வீரர்கள் மருத்துவமனையில்

தெங்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த இலங்கை வீரர்களில் 6 பேர் தொடர்ந்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இருக்கும் இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வீரர்களில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேபாளத்திலிருந்து
எம்.எஸ்.எம்.பிர்தௌஸ் 

Tue, 12/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை