குழப்பங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வீதிகளில் கூடி நின்று குழப்பங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அதேநேரம் அவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் ரத்துச் செய்யப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித்த நேற்று தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை மாணவர்கள் வீதியில் கலகங்களில் ஈடுபடுவதனை தடுப்பதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் பரீட்சை நிலையங்களைச்சூழ பொலிஸ் ரோந்து சேவையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் காரணமாக பரீட்சை முடிவடைந்ததும் மாணவர்கள் வீதிகளில் கூடி நிற்காமல் அமைதியாக கலைந்து தமது வீடுகளை நோக்கிச் செலுலுமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

1968 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பரீட்சைகள் சட்டத்தின் கீழ் பரீட்சை நிலையத்துக்கு அண்மையில் அல்லது அச்சூழவில் குழப்பம் எற்படுத்துபவர்கள், மற்றைய மாணவர்களை குழப்புபவர்கள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படும் அதேநேரம் அவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் ரத்துச் செய்யப்படுமென்றும் அவர் விளக்கமளித்தார்.

இது தொடர்பில் அனைத்து பரீட்சை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

 லக்ஷ்மி பரசுராமன் 

Tue, 12/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை