சிகரெட், மதுபான விலைகளில் மாற்றமில்லை

‘வற்’ வரி 8வீதமாக குறைக்கப்பட்டது. இதனூடாக பொருட்கள் சேவைகளின் விலைகள் குறைவடைந்து மக்களுக்கு அதன் நன்மை சென்றடையவேண்டும். இதை உறுதி செய்ய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சினூடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

விலைக் குறைப்பின் பயன்கள் மக்களை சென்றடைய பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும் என்ற கருத்து தவறானது என்று கூறிய அவர், ‘வற்’ வரி குறைப்பால் சிகரட், மதுபான விலைகள் குறையாது என்றும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட வருமானம் திரட்டும் சகல நிறுவனங்களும் வரி குறைப்பு தொடர்பான சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளன. வரி குறைத்தாலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இதன் பலன் கிடைக்காது என சிலர்  குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3மாத காலத்திற்குள் இதற்கு பாராளுமன்ற அனுமதி பெற்றால் போதுமானது.

நான் வர்த்தக அமைச்சராக இருந்த போதும் இவ்வாறு வரி மாற்றம் செய்து பின்னரே பாராளுமன்ற அனுமதி பெற்றுள்ளேன். 8வீத வற் வரி குறைப்பு சட்டபூர்வமாக குறைக்கப்பட்டு சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

இதனுடன் சிகரட், மதுபானம் புகையிலை விலைகளும் குறையும் என சிலர் விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் அவற்றின் விலைகள் குறையாது. அவை விசேட உற்பத்தி வரிக்கு இணைக்கப்பட்டு தற்பொழுது போன்றே வரி அறிவிடப்படும். அரசுக்கான வரி வருமானமும் குறையாது. வரிச் சலுகையினூடான பாவனையாளர்களுக்கு நன்மைகள் கிடைக்க வேண்டும். பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைய வேண்டும். இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, உள்நாட்டு வர்த்தக அமைச்சு உரிய விசாரணை மேற்கொண்டு விலைகுறைப்பு தொடர்பாக மேற்பார்வை செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

Fri, 12/06/2019 - 10:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை